பிரிவினையை தூண்டும் வகையில் அறிக்கை பாஜ தலைவர் அண்ணாமலைக்கு சைபர் க்ரைம் போலீஸ் சம்மன்?.. விசாரணைக்கு பின் கைதாவாரா?

சென்னை: தமிழக பாஜ மாநில தலைவர் அண்ணாமலை வடமாநில தொழிலாளர்கள் விவகாரம் தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். ‘‘வடமாநிலத்தவர் மீதான வெறுப்பு பிரசாரங்களுக்கு முடிவு கட்டுவாரா தமிழக முதலமைச்சர்?’ என்ற தலைப்பில் வெளிடப்பட்ட அறிக்கையில் திமுக எம்.பி.க்கள், அமைச்சர்கள் வடமாநிலத்தவர்களை பற்றி ஏளனமாக பேசிய பேச்சுகளை குறிப்பிட்டு இருந்தார். இந்நிலையில், அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கை வன்முறையை தூண்டும் வகையில் இருப்பதாகவும், அவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சென்னை மண்ணடியைச் சேர்ந்த குமரன் என்பவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார்.

அதன் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் போலீசார் அண்ணாமலை மீது கலகத்தை தூண்டும் வகையில் பேசுவது, பேச்சால் அல்லது எழுத்தால் உணர்ச்சியை தூண்டுதல், அறிக்கை மூலமாக குறிப்பிட்ட நபர் மீது குற்றம் சாட்டி பிரிவினையை தூண்டுதல், உள்நோக்கத்துடன் செயல்படுதல் ஆகிய 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

அதை தொடர்ந்து அண்ணாமலை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில்,”முடிந்தால் என்னை கைது செய்யுங்கள்” என்று தமிழக அரசுக்கு சவால் விடுத்திருந்தார்.

 இந்நிலையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் போலீசார் அண்ணாமலையை கைது  செய்வது தொடர்பாக தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்கள். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை உள்ளிட்ட விஷயங்களை ஆராய்ந்து சட்ட நிபுணர்களுடன் கலந்து பேசி முடிவு எடுக்க உள்ளனர்.

எனவே அவர் மீது உடனடியாக கைது நடவடிக்கை பாயுமா என்று சட்ட நிபுணர்களின் ஆலோசனைக்கு பிறகே தெரியவரும். அண்ணாமலை மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால், அவருக்கு நேரில் ஆஜராகி விளக்கம் அளிப்பது குறித்து சம்மன் அனுப்ப மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் போலீசார் ஆலோசித்து வருகின்றனர். இதுபற்றி உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, அரசியல் தலைவர்கள் மீதான வழக்குகளில் நடவடிக்கை எடுப்பது தொடர்பாக நீதிமன்றம் சில அறிவுரைகளை வழங்கி இருக்கிறது. அதனை பின்பற்றி இந்த வழக்கில் நாங்கள் அண்ணாமலை மீது நடவடிக்கை மேற்கொள்வோம். அதுதொடர்பாக சட்ட நிபுணர்களுடன் கலந்து பேசி ஆலோசனை செய்த பிறகு இறுதி முடிவு எடுக்கப்படும். அண்ணாமலை ஒரு ஐபிஎஸ் அதிகாரி. அவருக்கு சட்ட நடைமுறைகள் தெரியும் என்று நினைக்கிறோம். எடுத்தவுடன் ஒருவரை கைது செய்ய முடியாது. ஏன் எல்லா வழக்கிலும் கைது செய்ய முடியாது. இது தெரியாமல் சிலர் பேசுகின்றனர். சென்னை போலீசை பொறுத்தவரை சட்டப்படி தான் செய்வோம். எடுத்தேன் கவிழ்த்தேன் என்று செய்ய முடியாது என்றார்.

வடமாநில தொழிலாளர்கள் விவகாரம் தொடர்பாக திருப்பூரில் 3 வழக்குகள், கிருஷ்ணகிரியில் ஒரு வழக்கு, தூத்துக்குடியில் ஒரு வழக்கு என மொத்தம் 5 வழக்குகளை போலீசார் பதிவு செய்துள்ளனர். அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இதற்காக தனிப்படை போலீசார் டெல்லி விரைந்துள்ளனர். மேலும் பீகாருக்கும் தனிப்படை போலீசார் செல்கிறார்கள். இந்நிலையில் அண்ணாமலை மீது போடப்பட்டு உள்ள வழக்குகள் தொடர்பாக போலீசார் ஆலோசனை நடத்தி நடவடிக்கை எடுக்க இருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: