திருவள்ளூர் மாவட்டத்தில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம்: மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா கலெக்டர் வழங்கினார்

திருவள்ளூர்: திருவள்ளுர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் பொதுமக்களிடமிருந்து 336 கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு, மனுக்களின் மீது உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இதில் நிலம் சம்பந்தமாக 99 மனுக்களும், சமூக பாதுகாப்பு திட்டம் தொடர்பாக 86 மனுக்களும், வேலைவாய்ப்பு தொடர்பாக 20 மனுக்களும், பசுமை வீடு மற்றும் அடிப்படை வசதிகள் தொடர்பாக 55 மனுக்களும் மற்றும் இதர துறைகள் சம்பந்தமாக 76 மனுக்களும் என மொத்தம் 336 மனுக்கள் பெறப்பட்டது.

இம்மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு, தகுதியுள்ள பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிட சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார். மேலும் இக்கூட்டத்தில், கலெக்டரின் விருப்புரிமை நிதியின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு மேசைப்பந்து பயிற்சி அளிப்பதை ஊக்குவிக்கும் விதமாக ஒரு மாற்றுத்திறனாளி பயிற்சியாளருக்கு உதவித்தொகையாக ரூ.20 ஆயிரத்திற்கான காசோலையையும், 3 பயனாளிகளுக்கு தலா ரூ.6,200 வீதம் ரூ.18,600 மதிப்பீட்டிலான இலவச தையல் இயந்திரங்களையும், ஒரு பயனாளிக்கு ரூ.6,400 மதிப்பீட்டிலான இலவச சலவை பெட்டியையும் என மொத்தம் ரூ.45 ஆயிரம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை  கலெக்டர் வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து, நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 20 பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் திருவள்ளுர் வட்டம் - பாக்கம் கிராமத்தில் தலா ரூ.2 லட்சத்து 89 ஆயிரம் வீதம் ரூ.57.80 இலட்சம் மதிப்பீட்டிலான இலவச வீட்டுமனை பட்டாக்களை கலெக்டர் வழங்கினார். இம்மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சு.அசோகன், தனித்துணை கலெக்டர் பி.ப.மதுசூதணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கா.காயத்திரி சுப்பிரமணி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ச.பாபு, பேச்சு பயிற்சியாளர் சுப்புலட்சுமி, சைகை மொழி பெயர்ப்பாளர் சசிகலா, முடநீக்கு வல்லுநர் ஆஷா மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Related Stories: