புலம்பெயர் தொழிலாளர்கள் பற்றி வதந்தி பரப்பிய வழக்கில் முன்ஜாமீன் கோரி பிரசாந்த் உம்ராவ் மனு: டெல்லி ஐகோர்ட்டில் நாளை விசாரணை..!

டெல்லி: புலம்பெயர் தொழிலாளர்கள் பற்றி வதந்தி பரப்பிய வழக்கில் முன்ஜாமின் கோரி பாஜக செய்தி தொடர்பாளர் மனுத் தாக்கல் செய்துள்ளார். கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு தொழிற்சாலையில் லட்சக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் வீடியோக்கள் பரவியதால், அவர்களிடம் அச்சம் ஏற்பட்டது. அவை எல்லாம் வதந்தி என அந்தந்த மாவட்டங்களில் உள்ள வடமாநில தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த, மாவட்ட கலெக்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தவிட்டார்.

இதுபோல் வதந்தி பரப்புகிறவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்திருந்தார். இதனிடையே இந்தி பேசியதற்காக 12 புலம்பெயர் தொழிலாளர்கள் கழுத்தறுத்துக் கொல்லப்பட்டதாக பாஜக செய்தி தொடர்பாளர் பிரசாந்த் உம்ராவ் வதந்தி பரப்பினார். வெவ்வேறு மாநிலங்களில் நடந்த வெவ்வேறு குற்ற சம்பவ வீடியோக்களை டிவிட்டரில் பகிர்ந்து வதந்தி பரப்பியிருந்தார். புலம்பெயர் தொழிலாளர்கள் பற்றி வதந்தி பரப்பியதாக உ.பி. பாஜக செய்தி தொடர்பாளர் மீது தமிழ்நாடு போலீஸ் வழக்குப் பதிவு செய்தது.

ஜாமீனில் வர முடியாத பிரிவுகளின் கீழ் பிரசாந்த் உம்ராவ் மீது தமிழ்நாடு போலீஸ் வழக்குப் பதிவு செய்தது. பாஜக செய்தி தொடர்பாளர் பிரசாந்த் உம்ராவை கைது செய்ய திருச்செந்தூர் தனிப்படை போலீஸ் டெல்லி விரைந்துள்ளது. இந்நிலையில் புலம்பெயர் தொழிலாளர்கள் பற்றி வதந்தி பரப்பிய வழக்கில் முன்ஜாமீன் கோரி பாஜக செய்தி தொடர்பாளர் மனுத் தாக்கல் செய்துள்ளார். பாஜகவின் பிரசாந்த் உம்ராவ் தாக்கல் செய்த முன்ஜாமின் மனு டெல்லி யர்நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது. பொய் செய்திக்கு நான் பலிகடா ஆகிவிட்டேன்.

வேண்டுமென்றே உள்நோக்கத்தோடு பரப்பவில்லை. பாஜகவை சேர்ந்தவர் என்பதால் அரசியல் நோக்கத்தோடு என் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. புலம்பெயர் தொழிலாளர்களின் நிலை தொடர்பாக தனது வேதனையை பகிர்ந்து கொள்வதற்காகவே டிவீட் செய்தேன். ஊடகங்கள், பிரபலங்கள் வெளியிட்ட செய்தியை பகிர்ந்தேன், அது போலியானது என தெரிந்ததும் நீக்கிவிட்டேன் இவ்வாறு மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: