நெல்லை பொருநை புத்தக திருவிழா நாளை நிறைவு: ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் குவிந்தனர்

நெல்லை: நெல்லையில் நடைபெறும் புத்தக திருவிழா நாளையுடன் நிறைவு பெறும் நிலையில் இன்று பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் கூட்டம் அலைமோதியது. நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில் பொருநை புத்தக திருவிழா இன்று 10வது நாளாக நடைபெறுகிறது. புத்தக கண்காட்சி நாளை இரவுடன் நிறைவு பெற உள்ளது. இந்தநிலையில் இன்று காலை 10 மணி முதல் நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பஸ், வேன்களில் அணி,அணியாக வந்து குவிந்தனர்.

காலை முதல் ஆயிரக்கணக்கானோர் கண்காட்சியை பார்வையிட்டு வருகின்றனர். பழங்கால பொருட்கள் கண்காட்சி அரங்கில் வைக்கப்பட்டிருந்த 200 ஆண்டுகளுக்கு முந்தைய பழங்கால பொருட்களை மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பார்த்து மகிழ்ந்தனர். அவர்கள் இதுவரை அறிந்திடாத முதல் புகைப்பட கேமரா, ஒருமுறை கீ கொடுத்தால் பல நாட்கள் ஓடும் கடிகாரம், பழங்கால நாணயங்கள், பீங்கான், செப்பு கல்பாத்திரங்கள், வீட்டு உபயோக பொருட்கள் போன்றவற்றை பயன்படுத்திய விதம் குறித்து விளக்கம் கேட்டு அறிந்து கொண்டனர்.

மேலும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு நடத்தப்படும் கைத்திறன் பயிற்சி பட்டறையில் இன்று கண்ணாடி ஓவிய பயிற்சி பெற்றனர். இவைதவிர கண்காட்சி கலையரங்கில் மாணவர்களுக்கு பல்வேறு விதமான போட்டிகளும் நடத்தப்பட்டன. மானூர் அரசு கலைக்கல்லூரி, மதிதா இந்து கல்லூரி மாணவர்கள் பங்கேற்று ஒருநாள் புத்தகம் தயாரிக்கும் பயிற்சி பெற்று புத்தகம் தயாரித்தனர்.

Related Stories: