மீனம்பாக்கம்: சென்னை, மதுரை, திருச்சி, கோவை உள்ளிட்ட விமான நிலையங்களில் உள்ள சரக்ககங்களில் கையாளப்பட்ட சரக்குகள் கடந்தாண்டைவிட இந்தாண்டு குறைந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். சென்னை விமான நிலைய வளாகத்தில் சர்வதேச சரக்கக முனையம் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இந்த முனையம், தமிழ்நாட்டிற்கு மட்டுமின்றி ஆந்திரா, புதுச்சேரி, மாநிலங்களின் சரக்குகளையும் கையாண்டு வருகிறது. இந்நிலையில் சென்னை விமான நிலைய சரக்ககம், இந்தாண்டு ஜனவரியில் 2 கோடியே 35 லட்சத்து 93 ஆயிரம் கிலோ சரக்குகளை கையாண்டுள்ளது. ஆனால் கடந்தாண்டு ஜனவரி மாதத்தில் 2 கோடியே 57 லட்சத்து 78 ஆயிரம் கிலோவாக இருந்துள்ளது. எனவே கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் இந்தாண்டு கையாளப்பட்ட சரக்குகளின் அளவு 21 லட்சத்து 85 ஆயிரம் கிலோ குறைந்துள்ளது.
அதேபோல மதுரை, திருச்சி, கோவை விமான நிலையங்களில் உள்ள சர்வதேச சரக்கங்களிலும், கடந்தாண்டை விட இந்தாண்டு சரக்குகள் கையாளப்பட்ட அளவு குறைந்துள்ளது. குறிப்பாக கோவை விமான நிலைய சர்வதேச சரக்கரகத்தில் 6.22 லட்சம் கிலோ சரக்குகள் கையாளப்பட்டுள்ளன. இந்தாண்டு 3.40 லட்சம் கிலோ சரக்குகள் மட்டுமே கையாளப்பட்டுள்ளன. இதேபோல மதுரை, திருச்சியிலும் கையாளப்பட்ட சரக்குகளின் அளவு குறைந்துள்ளது.இது பற்றி சென்னை விமான நிலைய சர்வதேச சரக்கக அதிகாரிகளிடம் கேட்டபோது கூறியதாவது: சென்னை விமான நிலையத்தில் சரக்கத்தில் ஒவ்வொரு மாதமும், ஏற்றத்தாழ்வுகள் ஏற்படுவது சகஜம். அதில் குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் எதுவும் இல்லை. மேலும் கையாளப்பட்ட சரக்குகளில், இறக்குமதி செய்யப்படும் சரக்குகளின் அளவுதான் குறைந்துள்ளது. ஏற்றுமதி சரக்குகள் அதே நிலையில் தான் இருக்கிறது. குறையவில்லை. இது எதை காட்டுகிறது என்றால், தற்போது நாம் சொந்தமாக பொருட்களை பெருமளவு உற்பத்தி செய்கிறோம்.
வெளிநாடுகளில் இருந்து, இறக்குமதிக்காக காத்திருக்கவில்லை. நமது நாடு சுயமாக சொந்த காலில் நிற்க தொடங்குகிறது என்பதை காட்டுகிறது.அதுமட்டுமின்றி மிக முக்கியமாக, கடந்த 2022ம் ஆண்டு, நம் நாட்டில் கொரோனா வைரஸ் 3ம் அலையின் தாக்குதல் அதிகளவில் இருந்தது. அந்த நேரத்தில் மருத்துவ உபகரணங்கள் வெளிநாடுகளில் இருந்து அதிகளவில் இறக்குமதி செய்யப்பட்டன. அதில் உயிர்காக்கும் ஆக்சிஜன் சிலிண்டர்கள் முக்கிய பங்கு வகித்தது. ஆனால் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு முற்றிலும் குறைந்து விட்டதால், வெளிநாடுகளில் இருந்து மருத்துவ உபகரணங்கள் இறக்குமதி செய்வது மிகவும் குறைந்துவிட்டது. கடந்தாண்டை விட இந்தாண்டு ஜனவரியில், தமிழ்நாட்டில் உள்ள விமான நிலைய சரக்ககங்களில், இறக்குமதி சரக்குகள் கையாளப்பட்டது குறைவுக்கு இதுவும் ஒரு முக்கிய காரணம்.