தோள் சீலை போராட்ட 200வது ஆண்டு நிறைவு, நாகர்கோவிலில் இன்று மாலை பிரமாண்ட பொதுக்கூட்டம்: மு.க.ஸ்டாலின், பினராயி விஜயன் பங்கேற்பு

நாகர்கோவில்: நாகர்கோவிலில் இன்று மாலை நடக்க இருக்கும் தோள் சீலை போராட்டத்தின் 200வது ஆண்டு நிறைவு பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர் பங்கேற்று பேசுகிறார்கள். கடந்த 1822ம் ஆண்டு சாதிய கட்டமைப்புக்கு எதிராக நடந்த போராட்டமான தோள் சீலை போராட்டத்தின் 200வது ஆண்டு நிறைவு பொதுக்கூட்டம் நாகர்கோவில் நாகராஜா திடலில் இன்று (6ம்தேதி) மாலை 6 மணிக்கு நடக்கிறது. இந்த பொதுக்கூட்டத்துக்கு முன்னாள் எம்.பி. பெல்லார்மின் தலைமை வகிக்கிறார். இதில் எம்.எல்.ஏ.க்கள் பிரின்ஸ், ராஜேஷ்குமார், விஜயதரணி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் வரவேற்கிறார். இந்த பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் ஆகியோர் சிறப்புரையாற்றுகிறார்கள்.

அமைச்சர் மனோ தங்கராஜ்,  மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ், விஜய் வசந்த் எம்.பி., பாலபிரஜாபதி அடிகள் உள்ளிட்டோர் உரையாற்றுகிறார்கள். இந்த பொதுக்கூட்டத்தில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டம் மட்டுமின்றி, கேரளாவில் இருந்தும் திரளானவர்கள் பங்கேற்கிறார்கள். இந்த பொதுக்கூட்டத்துக்காக நாகர்கோவில் நாகராஜா திடலில் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று மாலை 6 மணியளவில் மதுரையில் இருந்து கார் மூலம் நாகர்கோவில் வருகிறார். இந்த பொதுக்கூட்டம் முடிந்து இன்று இரவு நாகர்கோவில் அரசு விருந்தினர் மாளிகையில், முதல்வர் தங்குகிறார்.

நாளை (7ம்தேதி) காலை 9.30 மணிக்கு நாகர்கோவில் மாநகராட்சி புதிய கட்டிடமான கலைவாணர் மாளிகையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். பின்னர் காலை 11 மணிக்கு நாகர்கோவில் ஒழுகினசேரியில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் கலைஞரின் முழு உருவ வெண்கல சிலையை திறந்து வைத்து, அங்கு புதியதாக அமைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பத்தில் திமுக கொடியேற்றி வைக்கிறார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு மதியம் 2 மணிக்கு தூத்துக்குடி செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமானம் மூலம் சென்னை புறப்பட்டு செல்கிறார். பொதுக்கூட்டத்தில் இரு மாநில முதல்வர்கள் பங்கேற்பதால் பொதுக்கூட்டம் நடைபெற உள்ள நாகராஜா திடலை சுற்றி போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இன்று காலை வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய் சோதனையும் நடைபெற்றது.

Related Stories: