அதிமுக-பாஜக கூட்டணி உடைகிறதா?.. எடப்பாடி பழனிசாமிக்கு அண்ணாமலை ஆதரவாளர் கடும் கண்டனம்..!

சென்னை: பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு எதிராக போர்க்கொடி தூக்கி அடுத்தடுத்து நிர்வாகிகள் வெளியேறுவதால் அக்கட்சியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. அண்ணாமலை மீது சரமாரியாக குற்றச்சாட்டுகளை முன்வைத்து, பாஜக ஐ.டி. விங் தலைவராக இருந்த நிர்மல் குமார் அக்கட்சியில் இருந்து நேற்று விலகினார். எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்த அவர், அண்ணாமலை சொந்தக் கட்சியினரையே வேவு பார்ப்பதாக குற்றம்சாட்டினார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது கட்சி நிர்வாகிகளையே உளவு பார்த்து ஆனந்தமடைகிறார். பாஜக தலைமையகமான கமலாலயத்தில் ஒவ்வொரு செங்கலையும் அண்ணாமலை வியாபாரமாக்கி தொண்டர்களை ஏமாற்றுகிறார்.

இடத்துக்கு ஏற்ப நடித்து ஏமாற்றிவரும் அண்ணாமலையை பார்த்து ஒவ்வொரு நாளும் வேதனை அளிப்பதாகவும் நிர்மல்குமார் கூறியிருந்தார். 2019-ல் இருந்து பாஜகவின் கட்டமைப்பில், தற்போது 20% கூட இல்லை. என்னுடைய விலகல் யாரும் எதிர்பார்க்காத ஒன்று, அதனால் அதிர்ச்சியாக இருக்கலாம். கூட்டணி கட்சியாக இருப்பதால் பாஜகவை பற்றி நான் எதுவும் பேசத் தயாராக இல்லை என்றும் கூறியிருந்தார். இதனிடையே பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு எதிராக அக்கட்சியின் மற்றொரு மாநில நிர்வாகி போர்க்கொடி தூக்கியுள்ளார். அண்ணாமலை மீது சரமாரியாக குற்றச்சாட்டுகளை முன்வைத்து பாஜக மாநில செயலாளர் திலீப் கண்ணன் கட்சியில் இருந்து விலகினார்.

மாநில தலைவர் பொறுப்பேற்ற போது 500 தலைவர்களை உருவாக்குவதாக கூறிய அண்ணாமலை இதுவரை எத்தனை பேரை உருவாக்கியுள்ளார் என்றும், தன்னைத் தவிர வேறு யாருக்கும் மீடியா வெளிச்சம் வரக் கூடாது என பாஜகவினரை தொலைக்காட்சி விவாதங்களுக்கு அனுப்புவதில்லை. தன்னை நேர்மையானவர் எனக் கூறிக் கொள்ளும் அண்ணாமலை ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடி கும்பலை கட்சியில் வைத்துள்ளார். பாஜக மூத்த நிர்வாகிகளுக்கு எந்த பொறுப்பும் அண்ணாமலை கொடுக்கவில்லை. பாஜக சட்டமன்றக் கட்சித் தலைவர் நயினார் நாகேந்திரனை அண்ணாமலை மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஒரு மனிதனாகக் கூட மதிப்பதில்லை.

தான் வந்த பிறகு எல்லாம் செய்தது போல் அண்ணாமலை பேசுவதாகவும், அந்த இடத்தில் ஒரு பொம்மை இருந்திருந்தால் கூட இதைச் செய்திருக்கும். சொந்தக் கட்சியில் பல ஆண்டுகளாக உழைப்பவர்களை வேவு பார்ப்பது அண்ணாமலையின் வேலை என்றும் விமர்சனம் செய்தார். அண்ணாமலை அமைத்துள்ள வார் ரூம் இன்னும் பல கட்சி நிர்வாகிகளை வெளியேற்றும் என்றும் திலீப் கண்ணன் கருத்து தெரிவித்தார். பாஜக மாநில தகவல் தொழில்நுட்ப அணி தலைவர் நிர்மல் குமாரும் அண்ணாமலை மீது சரமாரியாக குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார். இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி ஏமாற்று பேர்வழி என்று பாஜக மாநில விளையாட்டு பிரிவு செயலாளரும், அண்ணாமலை நண்பருமான அமர்பிரசாத் ரெட்டி விமர்சனம் செய்துள்ளார்.

பாஜக தகவல் தொழில்நுட்ப அணியின் மாநிலத் தலைவராக இருந்த நிர்மல்குமாரை அதிமுகவில் சேர்த்துக் கொண்டதற்கு அண்ணாமலை ஆதரவாளர் கண்டனம் தெரிவித்துள்ளார். கூட்டணி கட்சியாக இருந்து கொண்டு அதிமுக இப்படி செய்திருக்கக் கூடாது. கொங்கு மண்டலத்தை தங்கள் கோட்டையாக கருதிய எடப்பாடிக்கு வாக்காளர்கள் சரியான பாடம் புகட்டியுள்ளனர். 66,000 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக தோல்வி அடைந்திருப்பது அங்கு துளியும் செல்வாக்கு இல்லை என்பதை காட்டுகிறது. 4 ஆண்டுகாலம் ஏமாற்று பேர்வழிகளாக வலம் வந்தவர்களின் கதைகள் எல்லாம் ஊரறிந்த கதை என எடப்பாடி பழனிசாமி குறித்து அமர்பிரசாத் ரெட்டி விமர்சனம் செய்தார்.

கட்சி மாறி, பிழைப்பு வாதிகளை வைத்து அடுத்தவரை கேவலப்படுத்தி ரசிப்பவர் தலைமைப் பதவிக்கு தகுதியானவரா என்று எடப்பாடிக்கு கேள்வி எழுப்பினார். அண்ணாமலையின் தீவிர ஆதரவாளரான அமர்பிரசாத், எடப்பாடி பழனிசாமியை நேரடியாக விமர்சித்திருப்பதால் அதிமுக-பாஜக கூட்டணி நீடிக்குமா? என்ற என்ற கேள்வி எழுந்துள்ளது. பாஜகவுடன் கூட்டணி தொடர்பாக 2024 தேர்தலுக்கு முன் முடிவு எடுக்கப்படும் என்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறியிருந்தார்.

Related Stories: