மாசி மகத்தையொட்டி கும்பகோணம் மகாமக குளத்தில் தீர்த்தவாரி கோலாகலம்

கும்பகோணம்: மாசி மகத்தையொட்டி கும்பகோணம் மகாமக திருக்குளத்தின் நான்கு கரைகளிலும் 12 சிவாலயங்களில் இருந்து உற்சவர் சுவாமிகள் பஞ்சமூர்த்திகளுடன் ரிஷப வாகனத்தில் எழுந்தருள, அஸ்திரதேவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையுடன் மாசிமக தீர்த்தவாரி இன்று நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று, புனிதநீராடி, கரைகளில் எழுந்தருளிய சுவாமிகளை தரிசனம் செய்தனர்.தஞ்சை மாவட்டம் கும்பகோணம் காசிவிஸ்வநாதர் ேகாயில் அருகே புண்ணிய தீர்த்தங்களுள் ஒன்றான மகாமக குளம் உள்ளது. ஆண்டுதோறும் நடைபெறும் மாசி மக திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த குளத்தில் புனித நீராடுவார்கள். 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் மகாமக திருவிழாவில் லட்சக்கணக்கானோர் புனித நீராடுவர்.

6.2 ஏக்கர் பரப்பளவில் கும்பகோணம் நகரின் மத்தியில் அமைந்துள்ள இந்த குளத்தை சுற்றி 16 மண்டபங்களும், 21 தீர்த்தக் கிணறுகளும் உள்ளன.

மாசி மகத்தையொட்டி 12 சைவத்திருக்கோயில்கள் மற்றும் 5 வைணவத் திருக்கோயில்களுடன் இணைந்து 10 நாட்களுக்கு ஒருசேர நடைபெறுவது வழக்கம். அதுபோல இவ்வாண்டும் ஆதிகும்பேஸ்வரர், அபிமுகேஸ்வரர், காசிவிஸ்வநாதர், வியாழசோமேஸ்வரர், காளஹஸ்தீஸ்வரர் மற்றும் கவுதமேஸ்வரர் என ஆறு சைவ கோயில்களில் கடந்த பிப்ரவரி 25ம் தேதியும், சக்கரபாணிசுவாமி, ராஜகோபாலசுவாமி மற்றும் ஆதிவராகப்பெருமாள் ஆகிய மூன்று வைணவ கோயில்களில் 26ம் தேதியும் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கி தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமிகள் திருவீதியுலா நடைபெற்று வருகிறது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சைவ திருத்தலங்களில் 10ம் நாளான இன்று மாசிமகத்தை முன்னிட்டு பிரசித்தி பெற்ற மகாமக திருக்குளத்தின் 4 கரைகளிலும், 12 சிவாலயங்களில் இருந்து உற்சவர்கள் பஞ்சமூர்த்திகளுடன் ரிஷப வாகனங்களில் எழுந்தருள, அங்கு அஸ்திரதேவருக்கு எண்ணெய், திரவியப்பொடி, மாப்பொடி, மஞ்சள்பொடி, பஞ்சாமிர்தம், பால், தயிர், சந்தனம் என பலவகை பொருட்களால் சிறப்பு அபிஷேகமும், அதனைத்தொடர்ந்து தீபாராதனையும் நடைபெற்றது.பின்னர் நாதஸ்வர மேளதாளம் முழங்க, 12 அஸ்திர தேவர்களுடன் சிவாச்சாரியார்கள் மகாமககுளத்தில் ஒரே சமயத்தில் இறங்கி, குளத்து நீரில் மும்முறை மூழ்கி எழ மாசிமக தீர்த்தவாரியும், அதனை தொடர்ந்து கரையில் எழுந்தருளிய சுவாமிகளுக்கு மகா தீபாராதனையும் நடைபெற்றது.

அப்போது, ஆயிரக்கணக்கான பக்தர்கள் 4 புறங்களில் உள்ள படித்துறைகளில் புனித நீராடி 4 கரைகளிலும் எழுந்தருளிய பஞ்சமூர்த்திகளையும் ஒருசேர தரிசனம் செய்தனர். மாசிமகத்தையொட்டி பல்வேறு பகுதிகளிலிருந்து கும்பகோணத்தில் அதிகாலை முதலே குவிந்த பக்தர்கள் மகாமக குளத்தில் புனித நீராடினர். விழாவையொட்டி மகாமககுளம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் மட்டுமல்லாது, மாநகரின் முக்கிய இடங்கள் அனைத்திலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Related Stories: