தண்டையார்பேட்டையில் எடப்பாடி பங்கேற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் முதல்வர், அமைச்சர் உதயநிதி மீது அவதூறு பேச்சு 3 அதிமுக நிர்வாகிகள் மீது 10 பிரிவுகளில் வழக்கு

தண்டையார்பேட்டை: தண்டையார்பேட்டையில் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் முதல்வர், அமைச்சர் உதயநிதியை அவதூறாக பேசிய அதிமுக நிர்வாகிகள் 3 பேர் மீது 10 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75ம் ஆண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்குதல் மற்றும் பொதுக்கூட்டம் தண்டையார்பேட்டை ரெட்டை குழி தெரு சேனியம்மன் கோயில் தெரு சந்திப்பில் நேற்று மாலை நடந்தது. இதில், இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேசினார். முன்னதாக எடப்பாடி பழனிச்சாமி வருகையையொட்டி மகாராணி திரையரங்கம் முதல் தண்டையார்பேட்டை காவல் நிலையம் வரை திருவொற்றியூர் நெடுஞ்சாலையின் இருபுறமும் அதிமுகவின் பதாகைகளை ஆபத்தான முறையில் அதிமுகவினர் வைத்திருந்தனர். இந்த பதாகைகள் வைப்பதற்கு சென்னை மாநகராட்சியிடம் அனுமதி பெறவில்லை. மேலும், எல்இடி திரைகளை வைத்து, அதில், அதிமுகவுக்கு சம்மந்தமில்லாத சவுக்கு சங்கர், நாம் தமிழர் கட்சியை சேர்ந்த காளியம்மாள், பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே ஆகியோர் முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி பற்றி ஏற்கனவே பேசிய உறுதிப்படுத்தப்படாத பொய் செய்திகளை ஒளிபரப்பு செய்தனர்.

இந்த நிகழ்வு சட்டத்துக்கு புறம்பானது என்றும் பொதுமக்கள் மத்தியில் குழப்பத்தை உண்டாக்கும் முயற்சி என திமுக வட்ட செயலாளர் தமிழ்ச்செல்வன், தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் நேற்று புகார் செய்தார். அதன் பேரில் அதிமுக மாவட்ட செயலாளர் ராஜேஷ், ஆர்.கே.நகர் பகுதி செயலாளர் சீனிவாச பாலாஜி, வட்ட செயலாளர் அன்பு ஆகியோர் மீது இந்திய தண்டனை சட்டம் பிரிவுகள் 143 (சட்டவிரோதமாக கூடுதல்), 285 (தீப்பற்றக்கூடிய பொருட்களை கவன குறைவாக கையாளுதல்), 290 (பொது தொல்லை), 336 (மற்றவர்களின் உயிருக்கு அபாயம் விளைவிக்கும் செயல்), 505 (2) இரு பிரிவினரிடையே பகைமையை உண்டாக்கும் வகையில் வதந்தி பேச்சு, அறிக்கை அல்லது பீதியடைய வைக்கும் செய்தியை வெளியிடுதல், பரப்புதல் உள்ளிட்ட 10 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Related Stories: