தமிழ்நாட்டில் உள்ள 1748 பெண்கள் தங்கும் விடுதிகளில் 1155 விடுதிகள் அனுமதியின்றி செயல்படுகிறது: ஆர்டிஐ தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 1748 பெண்கள் தங்கும் விடுதிகளில் 1155 விடுதிகள் அனுமதியின்றி செயல்படுகிறது என்று ஆர்டிஐ தகவலில் தெரிவித்துள்ளனர். சென்னையில் உள்ள 714 பெண்கள் தங்கும் விடுதிகளில் 31 விடுதிகள் மட்டுமே அனுமதி பெற்றுள்ளது. சென்னையில் 683 பெண்கள் தங்கும் விடுதிகள் உரிய அனுமதியின்றி செய்லபட்டு வருகின்றது.

தமிழ்நாடு முழுவதும் 873 பெண்கள் தங்கும் விடுதிகளுக்கு சமூக நலத்துறை இயக்குநரகம் நோட்டிஸ் அனுப்பியுள்ளது.   கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாடு முழுவதும் 379 பெண்கள் தங்கும் விடுதிகள் மூடப்பட்டுள்ளது. சென்னைக்கு அடுத்து திருப்பூர் மாவட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட விடுதிகள் அனுமதியின்றி செயல்படுகின்றது.

தங்களுடைய வீடுகளில் இருந்து தொலைவில் உள்ள இடங்களில் தங்கும் பெண் குழந்தைகளும், பெண்களும் குழந்தைகளின் காப்பகங்கள், சிறுமிகளுக்கான விடுதிகள், பணிபுரியும் பெண்களின் விடுதிகள் போன்றவற்றில் தங்கி இருக்கின்றனர். தனியார் நடத்தும் இந்த விடுதிகளில் போதிய பாதுகாப்பு வசதிகள் கிடையாது. தீ தடுப்பு சாதனங்கள், அவசர கால வழிகள் எதுவும் இங்கு கிடையாது. வீடுகளையும், அடுக்குமாடி குடியிருப்புகளையும் விடுதிகளாக நடத்தி வரும் அதன் உரிமையாளர்கள் அடிப்படை வசதிகளை கூட அங்கு செய்து கொடுக்கவில்லை. சுகாதாரமற்ற சமையல் கூடம், சுத்தம் இல்லாத கழிப்பறைகள், காற்றோட்டம் இல்லாத அறைகள் என புகார் வந்துள்ள நிலையில் இந்த தகவல் தெரிவித்துள்ளனர்.

வெளியூர் சென்று விடுதிகளில் தங்கும் பெண்கள் மற்றும் மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக தமிழ்நாடு மகளிர் மற்றும் குழந்தைகள் விடுதிகள் மற்றும் இல்லங்கள் ஒழுங்குபடுத்துதல் சட்டம் 2014–ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. அதன்படி கட்டிடத்தின் உறுதி மற்றும் தூய்மை தன்மை குறித்து பொதுப்பணித்துறையிடம் சான்றிதழ் பெறுவதோடு பாதுகாப்பு வசதிகள் தொடர்பாக தீயணைப்பு துறையிடம் சான்றிதழ் பெற்ற பின், மாவட்ட கலெக்டரிடம் விடுதி நடத்த அனுமதி கேட்டு விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பத்துடன் மேற்கண்ட அனைத்து சான்றிதழ்களும் அளிக்கப்பட்டு உறுதி செய்த பின்பு பெண்கள் இல்லம், விடுதி நடத்த அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழ்நாட்டில் அனுமதியின்றி  1155 பெண்கள் விடுதிகள் செயல்படுகிறது என்று ஆர்டிஐ தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: