கொள்ளையடித்த நகைகளை மீட்க கொள்ளையர்களை கூட்டிக்கொண்டு பெங்களூரு சென்றது தனிப்படை

சென்னை: கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை மீட்க போலீசார் கொள்ளையர்கள் 2 பேரை அழைத்து கொண்டு பெங்களூரு சென்றுள்ளனர். சென்னை பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலையில் அமைந்துள்ள ஜேஎல் நகைக்கடையில் கடந்த மாதம் 10ம் தேதி வெல்டிங் மிஷினால் துளை போட்டு 9 கிலோ தங்க நகைகள் மற்றும் ரூ.20 லட்சம் மதிப்புள்ள வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இதுகுறித்து, ஸ்ரீதர் திருவிக நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். கொள்ளையர்களை பிடிக்க, கூடுதல் கமிஷனர் அன்பு, இணை கமிஷனர் ரம்யா பாரதி ஆகியோர் மேற்பார்வையில் 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

இந்நிலையில், குற்றவாளி கங்காதரன் மற்றும் ஸ்டீபன் ஆகியோர் 2.5  கிலோ தங்க நகைகளுடன், பெங்களூரு மகாலட்சுமி லேஅவுட் காவல் நிலையத்தில் 2 தினங்களுக்கு முன்பு  சரணடைந்தனர். அவர்களை கைது செய்து பெங்களூரு போலீசார் சிறையில் அடைத்தனர். இந்நிலையில், பெங்களூரு விரைந்து மகாலட்சுமி லேஅவுட் காவல் நிலைய போலீசார் உதவியுடன் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கஜேந்திரன் (31) மற்றும் திவாகர் (28) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் இருவரும் நேற்றுமுன் தினம் சென்னை அழைத்துவரப்பட்டனர். அவர்களை எழும்பூர் நீதிமன்ற உத்தரவுபடி, 5 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிபதி அனுமதி அளித்தார்.

இதனைத் தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் அழைத்துக் கொண்டு, நேற்று காலை புளியந்தோப்பு துணை கமிஷனர் ஈஸ்வரன் தலைமையில் செம்பியம் உதவி கமிஷனர் செம்பேடு பாபு உள்ளிட்ட தனிப்படை போலீசார் பெங்களூரு விரைந்துள்ளனர். கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை அங்கு இவர்கள் யாரிடமாவது கொடுத்து வைத்துள்ளார்களா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொள்ள உள்ளனர்.

மேலும் பெங்களூரு சிறையில் உள்ள முக்கிய குற்றவாளிகளான கங்காதரன் மற்றும் ஸ்டீபன் ஆகிய இருவரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க தனிப்படை போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த நகைக் கடை கொள்ளை வழக்கில் 2 பேர் ஏற்கனவே பெங்களூரு போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், மீதியுள்ள 2 பேரை திருவிக நகர் போலீசார் கைது செய்து தற்போது போலீஸ் காவலில் எடுத்து விசாரணை செய்து வருகின்றனர்.

Related Stories: