தமிழ்நாட்டில் வரும் 10ம் தேதி 1000 இடங்களில் சிறப்பு காய்ச்சல் முகாம்கள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் 1000 இடங்களில் சிறப்பு காய்ச்சல் முகாம்கள் வரும் 10ம் தேதி நடைபெறும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும் கடந்த டிசம்பர் 15ம் தேதி முதல் இன்ப்ளுயன்சா எச்3என்2 பாதிப்பு அதிகரித்து கொண்டேவருகிறது. தீவிர பாதிப்பை சந்திக்கும் 50 சதவீத நோயாளிகள் இந்த வகை தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். எச்3என்2 வைரசால் காய்ச்சல் வேகமாக பரவுகிறது. இந்த வைரஸ் காய்ச்சல் வந்தால் இருமல், தொண்டை வலி, உடல் வலியும் இருக்கும். தமிழ்நாட்டிலும் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. காய்ச்சல் பாதித்த ஏராளமானவர்கள் சிகிச்சைக்காக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைக்கு செல்கின்றனர்.

இதனால் மருத்துவமனைகளில் வழக்கத்திற்கும் அதிகமாக கூட்டம் காணப்படுகிறது. காய்ச்சலை கட்டுப்படுத்த அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது: புதுவகை வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் மாநிலம் முழுவதும் காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த காய்ச்சல் முகாம் வருகிற 10ம் தேதி தமிழ்நாடு முழுவதும் 1000 இடங்களில் நடைபெறும். காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும். இதில் சென்னையில் வார்டுக்கு ஒரு முகாம் வீதம் 200 வார்டுகளில் 200 முகாம்கள் நடத்தப்படுகிறது.

மேலும் தொற்று அதிகம் கண்டறியப்படும் இடங்களில் நடமாடும் மருத்துவமனைகளை கொண்டு சிகிச்சை அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. முகாமில் ஒரு மருத்துவர், செவிலியர், ஒரு ஆய்வக நுட்பனர் மற்றும் உதவியாளர்கள் இருப்பார்கள். குளிர்காலம் மற்றும் பருவ மழை காலம் நிறைவடையும்போது ஏற்படும் காய்ச்சல், இருமல் இருப்பவர்களுக்கு பரிசோதித்து மருந்து மாத்திரைகள் வழங்கப்படும். அறிகுறி உள்ளவர்கள், முதியவர்கள், குழந்தைகள் மற்றும் இணைநோய் உள்ளவர்கள் தவறாமல் இந்த முகாமை அணுகி பரிசோதித்து தேவைக்கேற்ற சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும். எனவே, 10ம் தேதி நடைபெறும் முகாமில் காய்ச்சல் உள்ளவர்கள் பரிசோதித்து கொள்ளவேண்டும். பொதுவாக வைரஸ் தொற்று ஏற்படுவதால் கூட்டங்களுக்கு செல்வதை தவிர்த்தல், முக கவசம் அணிதல் போன்ற சுய கட்டுப்பாட்டு முறைகளை கடைபிடிப்பது நல்லது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: