புதிய கல்வி கொள்கை என்ற பெயரில் மீண்டும் குலக்கல்வி முறையை கொண்டு வர பாஜ முயற்சி: அமைச்சர் பொன்முடி பேச்சு

சென்னை: புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில், மீண்டும் குலக்கல்வி முறையை கொண்டு வர பாஜ முயற்சி செய்கிறது என, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி குற்றம்சாட்டியுள்ளார். பூந்தமல்லி நகர திமுக சார்பில், முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழர் எழுச்சி நாள்  பொதுக்கூட்டம் நேற்று குமணன்சாவடியில் நடைபெற்றது. நிகழ்ச்சியில், பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர், பூந்தமல்லி எம்எல்ஏ கிருஷ்ணசாமி ஆகியோர் பங்கேற்றனர். பின்னர் அமைச்சர் பொன்முடி பேசுகையில், ‘‘புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் மீண்டும் குலக்கல்வி முறையை பாஜ கொண்டு வர முயற்சிக்கிறது. எந்த வகையிலாவது இந்தியை திணிக்க வேண்டும் என்று முயற்சிக்கிறார்கள். இந்தி படிப்பதை எதிர்க்கவில்லை. இந்தி திணிப்பதைத்தான் எதிர்க்கிறோம். அதனால்தான், தமிழின் முக்கியத்துவத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உணர்த்தி வருகிறார். தற்போது தேர்தல் வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருவது போல மகளிருக்கு ஆயிரம் ரூபாய் விரைவில் வழங்கப்படும் என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

நாங்கள் மதங்களுக்கு எதிரானவர்கள் அல்ல. மதங்களின் பெயரால் மக்களை அடிமைப் படுத்துபவர்களுக்கு எதிரானவர்கள். மதத்தை வைத்து பிரிக்க நினைப்பவர்கள் பாஜவினர். பாஜ இருந்தால் நாடே உருப்படாது. சிறுபான்மையினருக்கும், பெண்களுக்கும் ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். ஒரு காலத்தில் சிறுபான்மையினருக்கும், பெண்களுக்கும் கல்வியும், கோயிலுக்குள் நுழைவதும் மறுக்கப்பட்டிருந்தது. அதனை மாற்றிக் காட்டியதுதான் திராவிட மாடல். அதனால்தான் சிறுபான்மையினரும், பெண்களும், கல்வி, வேலை வாய்ப்பு பெற்று, அவர்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்துள்ளது. ஒரே நாடு, ஒரே கல்வி, ஒரே தேர்தல் என்று கூறுபவர்கள் இன்னும் சில காலங்கள் சென்றால் ஒரே சாப்பாடு என்றுகூட சொல்வார்கள். அதனை ஒழிக்க வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது’’ இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: