தமிழ்நாட்டு மக்கள் மிகவும் நல்லவர்கள் வடமாநில தொழிலாளர்கள் பாதுகாப்பற்ற உணர்வுடன் இருக்க வேண்டாம்: ஆளுநர் ஆர்.என்.ரவி வேண்டுகோள்

சென்னை: தமிழ்நாட்டு மக்கள் மிகவும் நல்லவர்கள் மற்றும் நட்பானவர்கள். எனவே, வடமாநில தொழிலாளர்கள் பாதுகாப்பற்ற உணர்வுடன் இருக்க வேண்டாம் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற வீடியோக்கள் சில நாட்களாக சமூக வலைதளங்களில் வெளியாகி வந்தது. இது குறித்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கவனத்துக்கு வந்ததும், வதந்தி பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார். இந்த நிலையில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படும் தகவல் உண்மையா, இல்லையா என்பதை கண்டறிய பீகார், ஜார்க்கண்ட் மாநிலங்களில் இருந்து 8 பேர் அடங்கிய அதிகாரிகள், சென்னை கலெக்டர் மற்றும் அதிகாரிகளை சந்தித்து விவரங்களை கேட்டறிந்தனர்.

நேற்று அவர்கள் கோவை, திருப்பூர் சென்றனர். அவர்கள் தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் பாதுகாப்பாக உள்ளனர். எந்த அச்சுறுத்தலும் கிடையாது என்பதை அறிந்து கொண்டனர். இது தொடர்பாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில்  உள்ள வட மாநில தொழிலாளர்கள் பீதியடைந்து பாதுகாப்பற்ற உணர்வுடன் இருக்க  வேண்டாம். தமிழ்நாட்டு மக்கள் மிகவும்  நல்லவர்கள்,நட்பானவர்கள். தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதில்  மாநில அரசு உறுதியுடன் இருக்கிறது. இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது. ஆளுநர் ஆர்.ரவி இந்த வேண்டுகோளை தமிழ், இந்தி, ஆங்கிலம் ஆகிய 3 மொழிகளில் தனது டிவிட்டர் பதிவில் கூறிப்பிட்டுள்ளார்.

Related Stories: