பிராண்டட் மருந்துகளை எழுதி கொடுக்காமல் நோயாளிகளுக்கு மருந்தின் பெயரிலேயே மாத்திரையை எழுதி தர வேண்டும் : டாக்டர்களுக்கு ஆளுநர் ரவி வேண்டுகோள்

சென்னை: மருந்து நிறுவனத்தின் பிராண்டட் பெயரில் இல்லாமல், மருந்தின் பெயரிலேயே மருத்துவர்கள் நோயாளிகளுக்கு மருந்துகளை எழுதி கொடுக்க வேண்டும் என்று மருத்துவர்களுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னை வண்ணாரப்பேட்டை தனியார் திருமண மண்டபத்தில், ‘ஜனஆரோக்கியா மேளா’ என்ற பெயரில் பிரதமரின் மக்கள் மருந்தகம் சார்பில் மருத்துவ முகாம் நேற்று காலை நடைபெற்றது. முகாமினை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு பரிசோதனை மேற்கொண்டனர்.

முகாமை தொடங்கிவைத்த பின் தமிழக ஆளுநர் ஆர்என் ரவி பேசியதாவது : இந்தியாவில், பிராண்டட் மருந்துகளின் விலை அதிகம். அவற்றை, ஏழைகளால் வாங்க முடியாது. குடும்ப தேவைக்கு வைத்துள்ள பணம், பிராண்டட் மருந்து வாங்க செலவாகிவிடும். இதனால், குடும்ப செலவுகள் பாதிக்கும். ஆனால், மருந்தின் பெயரில் (ஜெனரிக் மருந்து) விற்பனையாகும் மருந்தின் விலை குறைவு. தமிழகத்தில் 55க்கும் மேற்பட்ட மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. ஏராளமான மருத்துவர்கள் வந்து கொண்டிருக்கின்றனர். இவர்கள், பிராண்டட் மருந்துகளை நோயாளிகளுக்கு எழுதிக் கொடுக்காமல், ஜெனரிக் மருந்துகளை எழுதி தர வேண்டும். இதனை ஒரு சமூக கடமையாக மருத்துவர்கள் செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன்.

மருத்துவர்கள் எழுதும் மருந்தைத்தான் நோயாளிகள் நம்பி எடுத்துக் கொள்கிறார்கள். விளம்பரம் செய்யப்படும் மருந்தின் விலை அதிகம். எனவே, மருத்துவர்கள் ஜெனரிக் மருந்துகளை நோயாளிகளுக்கு பரிந்துரைக்க பரிசீலிக்க வேண்டும். இதன் மூலம், மருந்து செலவு குறைந்து அந்த குடும்பத்தின் பொருளாதாரத்தில் நிலைதன்மை உண்டாகும். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: