மூணாறு அருகே நள்ளிரவில் பஸ்சை மறித்த ‘படையப்பா’ யானை: சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரல்

மூணாறு: கேரள மாநிலம், மூணாறு பகுதியில் படையப்பா என்ற காட்டுயானை மக்களிடையே மிகவும் பிரபலமானது. மூணாறு மற்றும் சுற்றுப்புற எஸ்டேட் பகுதிகளில் அடிக்கடி சாலையோரங்களிலும், குடியிருப்பு பகுதிகளிலும் ஹாயாக உலா வருகிறது. குறிப்பாக மாட்டுப்பட்டி, எக்கோ பாயின்ட், பாலாறு உள்ளிட்ட இடங்களில் மக்கள் வசிக்கும் பகுதிகளில் புகுந்து, ஏராளமான சாலையோர கடைகளை அடித்து நொறுக்குவதை வழக்கமாக வைத்துள்ளது. அடிக்கடி சாலையில் இறங்குவதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. சுற்றுலாப்பயணிகளின் வாகனங்களை விரட்டி ஆபத்தை விளைவிக்கும் வகையிலும் செயல்படுகிறது. மூணாறு - மறையூர் சாலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 11.30 மணியளவில் ராஜமலை அருகே திருவனந்தபுரத்தில் இருந்து பழநி சென்று கொண்டிருந்த கேரள அரசு பஸ்சை படையப்பா காட்டுயானை வழிமறித்தது. பஸ்சின் முன்பக்க கண்ணாடியை தந்தத்தால் முட்டி தாக்கியது. ஆனால் டிரைவர் சிறிதும் அச்சப்படாமல் சாதுர்யமாக பஸ்சை இயக்கி கடந்து சென்றார். இந்த சம்பவத்தை பஸ்சிலிருந்த பயணி ஒருவர் செல்போனில் படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.

Related Stories: