ஆன்லைன் மோசடி கும்பல் கைது: 11 லேப்டாப், 19 கம்ப்யூட்டர் 22,735 சிம்கார்டுகள் பறிமுதல்

சிவகங்கை: செல்போனுக்கு மெசேஜ் அனுப்பி ஆன்லைன் மோசடியில் ஈடுபட்ட 18 பேர் கொண்ட கும்பலை சிவகங்கை தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இவர்களிடமிருந்து லேப்டாப், கம்ப்யூட்டர், சிம்கார்டுகள், செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சிவகங்கை மாவட்டம், காரைக்குடியை சேர்ந்தவர் முத்துக்கருப்பன். கடந்த மாதம் இவரது செல்போன் மெசேஜில் வந்த லிங்க்கை கிளிக் செய்தவுடன், இவரது கணக்கில் இருந்து ரூ.99 ஆயிரம் எடுக்கப்பட்டது. புகாரின் பேரில் இந்த மோசடி குறித்து சைபர்கிரைம் கூடுதல் ஏடிஎஸ்பி நமச்சிவாயம் தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரித்தனர்.

மெசேஜ் அனுப்பப்பட்ட செல்போன் எண், முகவரி மூலம் கோவை பீளமேட்டில் சிக்கா மார்க்கெட்டிங் என்ற பெயரில் நிறுவனம் நடத்தி வந்த சரவணன் (52), இவரது மனைவி பாரதி (44) மற்றும் இங்கு பணிபுரிந்து வந்த 5 பெண்களை கைது செய்தனர். சரவணன் கொடுத்த தகவலின் பேரில் காரைக்குடி ஏஎஸ்பி ஸ்டாலின் தலைமையிலான தனிப்படை போலீசார் லிங்க், மெசேஜ் மற்றும் எந்த செல்போன் எண்களுக்கு அனுப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட தகவல்கள் தரும் டெல்லியை சேர்ந்த சையது ரஹீப் குர்ஷீத் (23) என்பவரை கைது செய்தனர்.

மேலும், சிம் கார்டு முகவர்களான கோவையை சேர்ந்த ராம்குமார் (29), மேட்டுப்பாளையம் வினோத்குமார் (31), கோவை ஷாநவாஸ் (22), உமர்முகமது (19), பரத்பாலாஜி (30), திருச்சி ஜெயராம் (39), தூத்துக்குடி மாரீஸ்வரன் (23), பொள்ளாச்சி சந்தோஷ்குமார் (22), தென்காசி மூர்த்தி (48) ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 11 லேப்டாப்கள், 19 கம்ப்யூட்டர்கள், 292 செல்போன்கள், 22,735 சிம் கார்டுகள், 24 சிம் மோடம் பாக், 9 ஏடிஎம் கார்டு, 9 செக் புக் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Related Stories: