கோயம்பேடு வணிக வளாகத்தில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றி மருத்துவமனை கட்ட வேண்டும்: வியாபாரிகள் கூட்டமைப்பு கோரிக்கை

அண்ணாநகர்: கோயம்பேடு வணிக வளாகத்தில், ஆக்கிரமிப்பு  கடைகளை அகற்றி மருத்துவமனை வசதி செய்து தர வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை கோயம்பேடு மார்க்கெட்டை சுற்றி சுமார் 200க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு கடைகள் போடப்பட்டுள்ளன. இந்த கடைகளால் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. பொதுமக்கள் தங்களது வாகனங்களை வழியில் நிறுத்தி வைத்துவிட்டு செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, அவ்வழியில் பேருந்துகள் செல்வதற்கு சிரமம் ஏற்படுகிறது. இதுகுறித்து, போக்குவரத்து போலீசாரிடம் பலமுறை புகார் கூறியும் எந்த ஒரு பயனும் இல்லை.

இந்நிலையில், கோயம்பேடு மார்க்கெட்டை சுற்றியுள்ள ஆக்கிரமிப்பு கடைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என காய்கறி பழம் பூ உணவுதானியம் மார்க்கெட் அனைத்து வியாபாரிகள் சங்கங்களின் தலைவர் ஜி.டி.ராஜசேகரன் மற்றும்  வியாபாரிகள் அங்காடி நிர்வாக அலுவலர் சாந்தியிடம் புகார் மனு கொடுத்தனர். இதுகுறித்து, அங்காடி நிர்வாக அலுவலர் சாந்தி கூறுகையில், ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற, கடை உரிமையாளர்கள் ஒரு வாரம் அவகாசம் கேட்டு உள்ளனர். மார்க்கெட்டில் குடி தண்ணீர் வசதி,  மருத்துவமனை மற்றும் ஆம்புலன்ஸ் வசதி கொண்டுவர உயர் அதிகாரிகளிடம் ஆலோசனை செய்த பின்னர் ஏற்பாடு செய்யப்படும்’’ என்றார்.

கோயம்பேடு காய்கறி மார்க்கெட் அனைத்து வியாபாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ஜி.டி.ராஜசேகரன் கூறும்போது,  ‘‘ஆசியாவில் பெரிய மார்க்கெட்டாக இயங்கிவரும் மார்க்கெட்டில் மருத்துவமனை இல்லை. ஆம்புலன்ஸ் வாகனம் இல்லை. இதனை அங்காடி நிர்வாகம் ஏற்பாடு செய்து தரவேண்டும். உரிமம் இல்லாத  ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும்’’ என தெரிவித்தார்.

Related Stories: