திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் தளபதி கோப்பை பெண்கள் டி20 கிரிக்கெட் போட்டி: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பரிசு வழங்கினார்

சென்னை: திமுக விளையாட்டு மேம்பாட்டு அணியின் சார்பில், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு ‘தளபதி கோப்பை’ பெண்கள் டி20 கிரிக்கெட் போட்டி நடந்தது. மாநில கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடந்தது. மொத்தம் 8 அணிகள் மோதின. நேற்று மாலை நடந்த இறுதி போட்டியில் ஹச்ஆர் கிரிக்கெட் அகாடமி, வெங்கட் கிரிக்கெட் அகாடமி  அணிகள் மோதின. இதில் வெங்கட் கிரிக்கெட் அகாடமி அணி வெற்றி பெற்றது. பின்னர், பரிசு வழங்கும் விழா நடந்தது. திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி செயலாளரும், எம்பியுமான தயாநிதி மாறன் தலைமை வகித்தார். அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கினார்.

முதல் பரிசாக வெங்கட் கிரிக்கெட் அகாடமிக்கு ரூ.1 லட்சம் மற்றும் கோப்பை, சான்றிதழ் வழங்கப்பட்டது. 2ம் இடத்தை பிடித்த ஹச்ஆர் கிரிக்கெட் அகாடமி அணிக்கு ரூ.50 ஆயிரம் மற்றும் கோப்பை, சான்றிதழ் வழங்கப்பட்டது. போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் பரிசு வழங்கப்பட்டது. விழாவில் எம்பிக்கள் தமிழச்சி தங்கபாண்டியன், என்.வி.என்.கனிமொழி சோமு, மேயர் பிரியா, வீட்டு வசதி வாரிய தலைவர் பூச்சி முருகன், மாவட்ட திமுக செயலாளர் சிற்றரசு,  மாநகராட்சி ஆளுங்கட்சி துணை தலைவரும், திருவல்லிக்கேணி  பகுதி செயலாளருமான ஏஆர்பிஎம்.காமராஜ், சேப்பாக்கம் பகுதி செயலாளரும்,  மண்டல குழு தலைவருமான எஸ்.மதன்மோகன், வர்த்தகர் அணி துணை செயலாளர் வி.பி.மணி கலந்து  கொண்டனர்.

விழாவில் தயாநிதி மாறன் எம்பி பேசுகையில், ‘‘திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் எம்பி, எம்எல்ஏக்களுக்கான கிரிக்கெட் போட்டி நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். உடல் ஆரோக்கியமாக இருக்கும் வகையில் போட்டி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆரோக்கியமாக இருந்தால்தான் இடைத்தேர்தல் நடைபெறாது. அடுத்தகட்டமாக வருகிற 12ம் தேதி விழுப்புரத்தில் கபடி போட்டி நடைபெற உள்ளது. இதேபோல இளைஞர்களை ஊக்குப்படுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் விளையாட்டு போட்டிகள் நடத்தப்படும்’’ என்றார்.

போட்டியின் ஒருங்கிணைப்பு பணிகளை விளையாட்டு மேம்பாட்டு அணியின் மாநில துணைச் செயலாளர்கள் பொன்.கவுதம் சிகாமணி எம்.பி., எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி, ஜே.எல்.ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ, பைந்தமிழ் பாரி மற்றும் நெல்லை வே.நம்பி செய்தனர்.

Related Stories: