நந்தனம் கலை கல்லூரியில் ரூ.3.70 கோடியில் கலையரங்கம்

சென்னை: சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நந்தனம் அரசு ஆடவர் கலைக்கல்லூரியில் ரூ.3.70 கோடி மதிப்பீட்டில் கலையரங்க கட்டிடம் கட்டுவதற்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் நேற்று அடிக்கல் நாட்டினார். பின்னர் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி: நந்தனம் கலைக்கல்லூரியில் பொருளாதாரத்திலும், சமூக அடிப்படையிலும் பின்தங்கிய மாணவர்கள் கல்வி பயிலும் கல்வி நிறுவனங்களில் இதுவும் ஒன்று.  இந்த கல்வி நிறுவன வளாகத்தில் ஒரு கலையரங்கம் வேண்டும் என்கிற கல்லூரி முதல்வரின் கோரிக்கையை ஏற்று, ரூ.2 கோடி சட்டமன்ற மேம்பாட்டு நிதியிலிந்து ஒதுக்கீடு செய்யப்பட்டது.

ரூ.3.70 கோடி மதிப்பில் இந்த கலையரங்கத்தில் 1000 மாணவர்கள் அமர்ந்து நிகழ்ச்சிகளை நடத்த முடியும். 30க்கு 15 என்கின்ற அளவில் மேடை அமைப்பும், 1000 மாணவர்கள் அமரக்கூடிய வசதிகளுடன் கூடிய பெரிய அரங்கம் 65க்கு 165 என்கின்ற அளவிலான ஒரு பெரிய சதுர அடி  பரப்புள்ள அரங்கம் அமைய இருக்கிறது. கலைஞர் இக்கல்லூரியில் கலந்துரையாடும்போது நானும் பார்வையாளராக இருந்தவன்.  சைதாப்பேட்டைக்கு பெருமை சேர்த்தவர் கலைஞர். அவர் முதன்முறையாக பொதுப்பணித்துறை அமைச்சர் ஆனதும், முதன்முறையாக முதலமைச்சர் ஆனதும் சைதாப்பேட்டை தொகுதியில் வெற்றி பெற்ற பிறகுதான்.

எனவே இக்கல்லூரி கலையரங்கிற்கு முத்தமிழறிஞர் கலைஞரின் பெயரை சூட்ட வேண்டும் என கல்லூரியின் முதல்வர்  சொல்லியிக்கிறார். இந்த கோரிக்கையை முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று நிச்சயம் கலைஞர் பெயரோடு கலையரங்கம் வர நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார். நிகழ்ச்சியில் சென்னை துணை மேயர் மகேஷ்குமார், கல்லூரி முதல்வர் ஜெயச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: