போலி செய்தி வெளியிட்ட உ.பி. பாஜ செய்தி தொடர்பாளர் உள்பட 4 பேர் மீது வழக்கு; வதந்தி பரப்புவது மிகப்பெரிய குற்றம்: காவல்துறை எச்சரிக்கை

சென்னை: தமிழ்நாடு அமைதியாக உள்ள நிலையில், சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் வதந்திகளை பரப்புவது மிகப்பெரிய குற்றம் என தமிழக காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. வட மாநிலத்தவர்கள் தாக்கப்படுவதாக வெளியாகிவரும் செய்திகள் மற்றும் வீடியோக்களால் தமிழகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு, காவல் துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அச்சத்தால் வடமாநிலத்தவர்கள் தங்களது உடமைகளை எடுத்துக் கொண்டு தமிழகத்தை விட்டு வெளியேறி கொண்டுள்ளனர். தமிழகத்தில், பல ஆண்டுகளாக வடமாநிலத்தவர்கள் நல்ல பணி சூழலில் வேலை செய்து வந்தநிலையில், இது போன்ற குற்றச்சாட்டுகள் சர்ச்சையாகி வருகிறது.

இதுவரை, சென்னையிலிருந்தும் 30% வடமாநிலத்தவர்கள் தங்களது சொந்த ஊருக்கு சென்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து, சென்னை சென்ட்ரலில் ரயிலுக்காக காத்திருந்த வடமாநிலத்தவர்கள் தெரிவிக்கையில்: நாங்கள் தமிழகத்தில் பாதுகாப்பாக இருக்கிறோம். சென்னை மக்களோட தான் உட்கார்ந்து சாப்பிடுகிறோம். எங்களை யாரும் துன்புறுத்தவில்லை. ஹோலி பண்டிகைக்காக சொந்த ஊருக்கு சொல்கிறோம். அடுத்த 2, 3 வாரங்களில் மீண்டும் வருவோம். நாங்கள் ஊருக்கு செல்வதை சிலர் தவறாக சித்தரித்து ஊரைவிட்டு செல்வதாக வதந்தி பரப்புகிறார்கள் என்றனர்.

ரயில்வே காவல் துறை தகவல்: வடமாநிலத்தவர்கள்  பாதுக்காப்பை உறுதி செய்யும் விதமாக, சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், பெரம்பூர் உள்ளிட்ட தமிழ்நாட்டின் முக்கிய ரயில் நிலையங்களில் 200 க்கும் மேற்பட்ட ரயில்வே போலீசார் 3 மணி நேர சுழற்சி அடிப்படையில் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.

இது குறித்து தமிழக டிஜிபி சைலேந்திர பாபு தெரிவிக்கையில், ‘வெளிமாநில தொழிலாளர்களின் நலனுக்காக உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. சமூக வலைத்தளத்தில் பரவும் வீடியோக்களை யாரும் நம்ப வேண்டாம்’ என்றார்.

இது குறித்து தமிழக காவல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,‘‘வட மாநில தொழிலாளர்கள், தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாக உண்மைக்கு புறம்பான பொய்யான தகவல் இணையதளத்திலும், சமூக ஊடகங்களிலும் விஷமிகள் சிலரால் பரப்பப்பட்டுள்ளது. அப்படி பொய் செய்தி பரப்பியவர்கள், அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டு வருகிறார்கள். இது தொடர்பாக திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில், இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 153(A), 505(i) (b) கீழ் தெய்னிக் பாஸ்கர் பத்திரிகையின் ஆசிரியர் மீது ஒரு வழக்கும், திருப்பூர் மாவட்டம் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் இந்திய தண்டனைச் சட்ட பிரிவுகள் 153(B), 506(ii) (b) மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டபிரிவு 56(D) கீழ் தன்வீர் போஸ்ட் என்ற பத்திரிகை உரிமையாளர் முகமது தன்வீர் என்பவர் மீது ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதேபோல, தூத்துக்குடி மாவட்டம் சென்ட்ரல் காவல் நிலையத்தில் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 153, 153(A), 504, 505(1(b), 505(1(c), 505(2) கீழ் பிரசாந்த் உமராவ் என்பவர் மீது ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள இவர்களை கைது செய்ய போலீஸ் டிஜிபி உத்தரவின் பெயரில் தனி படை அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வாழும் புலம்பெயர்ந்த வட மாநில தொழிலாளர்கள் எவ்வித அச்சமும் இன்றி முழுபாதுகாப்புடன் அமைதியாக வசித்து வருகிறார்கள். அமைதியை சீர்குலைத்து பதட்டத்தை ஏற்படுத்தும் வகையில் பொய் செய்திகளை பரப்புவோர் பற்றிய விவரங்கள் காவல்துறையினரால் சேகரிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் மீது காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்கும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடமாநில தொழிலாளிகள் தாக்கப்படுவதாக வதந்தி பீகார், ஜார்கண்ட் மாநில அதிகாரிகளுடன் தொழிலாளர் நல ஆணையர் ஆலோசனை தமிழகத்தில் உள்ள பீகார் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக பரவிய வதந்தியை தொடர்ந்து, தமிழ்நாட்டுக்கு பீகார் மற்றும் ஜார்கண்ட் மாநில ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட குழு நேற்று மாலை தமிழகம் வந்தது. அதன்படி பீகார் மாநில ஊரக வளர்ச்சித்துறை செயலர் பாலமுருகன், காவல்துறை தலைவர் கண்ணன், தொழிலாளர் துறை ஆணையர் அலோக்குமார் மற்றும் சந்தோஷ்குமார் உள்ளிட்ட அதிகாரிகளை கொண்ட குழு, தமிழக டிஜிபி சைலேந்திரபாபுவை சந்தித்து பேசினர்.

இதனையடுத்து, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு தொழிலாளர் நல ஆணையர் அதுல் ஆனந்த் தலைமையில் நடந்த ஆலோசனைக்கூட்டத்தில் இந்த குழு பங்கேற்றது. இந்த கூட்டத்தில், பொதுத்துறை செயலர் ஜெகநாதன், மாவட்ட ஆட்சியர் அமிர்தஜோதி மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்துக்கொண்டனர். இதில், புலம் பெயர் தொழிலாளர்களுக்கான நலன் மற்றும் பாதுகாப்பு தொடர்பான விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

Related Stories: