அலகு குத்தி நேர்த்திக்கடன் சிறுவாபுரி முருகன் கோயிலுக்கு பாதயாத்திரை சென்ற பக்தர்கள்

பெரியபாளையம்: பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு, ஒவ்வொரு ஆண்டும் பெரியபாளையம் அருகே ஆரணியில் இருந்து அறுபடை வீடு முருகபக்தர்கள் பேரவை சார்பில் சிறுவாபுரி பாலசுப்பிரமணிய முருகன் கோயிலுக்கு அலகு குத்தியும், பால்குடம் ஏந்தியும், மலர் காவடி சுமந்தும் ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக சென்று, நேர்த்தி கடன்களை செலுத்தி வழிபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஆரணியில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு நேற்று 31வது ஆண்டாக 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து, அலகு குத்தியும், பால்குடங்கள் சுமந்தும் காவடி எடுத்தும் சிறுவாபுரி முருகன் கோயிலுக்கு மேளதாளங்கள் முழங்க, அரோகரா கோஷத்துடன் பாதயாத்திரையாக புறப்பட்டனர்.

வழிநெடுகிலும் பாதயாத்திரை பக்தர்களுக்கு, மக்கள் பாதபூஜை செய்து வழியனுப்பி வைத்தனர். பின்னர் நேற்று மாலை சிறுவாபுரி பாலசுப்பிரமணிய முருகன் கோயிலை பாதயாத்திரை குழுவினர் சென்றடைந்தனர். அங்கு உற்சவர் முருகனுக்கு அபிஷேக, ஆராதனை மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதை பாதயாத்திரை பக்தர்களுக்கு தரிசித்தனர். முன்னதாக, ஆரணியில் நூற்றுக்கணக்கான மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Related Stories: