தமிழ்நாடு ஆளுநர் ரவியை கண்டித்து ஐகோர்ட் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்

சென்னை: சென்னை உயர் நீதிமன்ற ஆவின் கேட் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட வழக்கறிஞர்கள், ஆளுநருக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி முழுக்கமிட்டனர். இதையடுத்து வழக்கறிஞர் விஜயகுமார் கூறும்போது, ‘இந்திய நாட்டில் ஆளுநர் பதவியேற்கும் மாநிலத்தில் உள்ள மக்களின் உரிமைகளை ஆளுநர் பாதுகாக்க வேண்டும். அவர்களிடம் மூட பழக்க வழக்க கருத்துகளை பரப்பக்கூடாது. ஆனால், தமிழ்நாடு ஆளுநர் தமிழ்நாட்டின் நலனுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார். ஜாதி வெறியை தூண்டும் சனாதன கொள்கையை ஆளுநர் ரவி பிரசாரம் செய்து வருகிறார்.

சமூகநீதிக்கு எதிராக செயல்படும் ஆளுநர் உடனடியாக பதவியை துறந்து தமிழ்நாட்டை விட்டு வெளியேற வேண்டும்’ என்றார். அதேபோன்று வழக்கறிஞர் அருள்மொழி பேசுகையில், ‘சமத்துவத்தை பரப்பிய கார்ல் மார்க்ஸ் கொள்கைக்கு எதிராக கருத்துகளை கூறி வருவதோடு, நாங்கள் சமத்துவத்தை ஏற்க மாட்டோம் என்று ஆளுநர் கூறி வருகிறார். சமூகம், சமத்துவம், அறிவியல் என்ற மூன்றுக்கும் எதிராக ஆளுநர் பேசி வருவது கண்டிக்கத்தக்கது. ஆகவே, அவர்  உடனடியாக தமிழ்நாட்டை விட்டு வெளியேற வேண்டும்’ என்றார்.

Related Stories: