ஒன்றிய பாஜ அரசை அகற்ற வரும் நாடாளுமன்ற தேர்தலில் சிந்தித்து செயல்பட வேண்டும்: கனிமொழி எம்பி பேச்சு

பெரம்பூர்: சென்னை அயனாவரத்தில் `மக்கள் முதல்வரின் மனிதநேயத் திருநாள்’ என்ற தலைப்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, சென்னை கிழக்கு மாவட்ட திமுக மகளிர் அணி சார்பில், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் சுதா தீனதயாளன் தலைமையில் பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு, அமைச்சர் பி.கே.சேகர்பாபு முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்பி., சாரதா நம்பி ஆரூரான், வழக்கறிஞர் மதிவதினி ஆகியோர் கலந்து கொண்டனர்.கனிமொழி எம்பி பேசியதாவது:

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில், திமுக வெற்றி பெற்றது நமக்கு கிடைத்த மிகப்பெரிய இமாலய வெற்றி. இந்த வெற்றியை தடுப்பதற்கு சிலர் குறுக்கு வழிகளை செய்தாலும், அதனையெல்லாம் முறியடித்து, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளார். ஜாதி, மதம், இனம் அனைத்திலும் ஒன்றுபட்டு சுதந்திரம் பெற்ற நம் இந்தியா, இன்று கருத்துரிமை, பேச்சுரிமை, ஜனநாயகம் பறிக்கப்பட்டு, மக்களின் வெறுப்பு அரசியலாக ஒன்றிய அரசின் ஆட்சி செயல்பட்டு வருகிறது. இந்த ஆட்சியை அகற்ற வருகிற நாடாளுமன்ற தேர்தலில் சிந்தித்து செயல்பட வேண்டும். அதற்கு அடித்தளமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் அமைந்துள்ளது.

படிக்கும் பெண்களுக்கு மாதம்‌  ரூ.1000 வழங்கிய புதுமை திட்டத்தை உருவாக்கி, தந்தை பெரியாரின் கனவை நினைவாக்கியதுதான் முதல்வரின் திராவிட மாடல் ஆட்சி. உறவுக்கு கை கொடுப்போம், உணர்வுக்கும், உரிமைக்கும் குரல் கொடுப்போம். சமூக நீதிக்காக குரல் கொடுப்பவர் முதல்வர் மு.க.ஸ்டாலின். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில், சென்னை மாநகர மேயர் பிரியா, திருவிக நகர் மண்டல குழு தலைவர் சரிதா, வில்லிவாக்கம் பகுதி திமுக செயலாளர் வாசு, மகளிர், தொண்டர் அணி செயலாளர் ராஜேஸ்வரி ஸ்ரீதர், திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: