ஈரோடு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக படுதோல்வி எடப்பாடி என்கிற துரோகியை மக்கள் ஏற்கவில்லை: ஓபிஎஸ் காட்டமான அறிக்கை

சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்ததற்கு முழு காரணம் எடப்பாடி பழனிசாமி என்கிற நம்பிக்கை துரோகியை மக்கள் ஏற்றுக்  கொள்ளவில்லை என்று ஓ.பன்னீர்செல்வம் காட்டமாக கூறியுள்ளார். இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: வரலாறு காணாத படுதோல்வியை அதிமுக அடைந்திருக்கிறது என்றால் அதற்கு காரணம் கட்சிக்காக உழைத்தவர்களை உதறித் தள்ளியது, பணத்தால் தன்னை முன்னிறுத்திக் கொள்ள முனைந்தது போன்ற நம்பிக்கை துரோகங்கள்தான். 2021ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலின்போது, ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் கிட்டத்தட்ட 9,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற காங்கிரஸ், தற்போது கிட்டத்தட்ட 67,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறது. பிரதான எதிர்க்கட்சியான அதிமுக வலுவிழந்த நிலையில் இருக்கிறது என்பது தெள்ளத் தெளிவாகிறது.

தமிழகத்தின் அரசியல் வரலாற்றில், ஓர் இடைத்தேர்தலில், அதிமுக கிட்டத்தட்ட 67,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருப்பதற்கு  முழு முதற் காரணம் எடப்பாடி பழனிசாமி என்கிற நம்பிக்கை துரோகியை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதுதான். ‘தான்’ என்ற அகம்பாவத்தில், ஆணவத்தில், அதிமுகவிற்காக உழைத்தவர்களை, தியாகம் செய்தவர்களை, ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்டவர்களை எல்லாம் கட்சியில் இருந்து வெளியேற்றி, ஒரு துதிபாடும் கூட்டத்தை தன் பக்கத்தில் வைத்துக் கொண்டு மனம்போன போக்கில் செயல்பட்டு வருகின்ற காரணத்தால்தான் தற்போதைய ஈரோடு கிழக்கு சட்டமன்ற தேர்தலில் அதிமுக படுதோல்வியை சந்தித்து உள்ளது.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் படுதோல்வியை ஒரு பாடமாக எடுத்துக் கொண்டு, இனி வருங்காலங்களில் அனைவரையும் ஒருங்கிணைத்து கழகத்தை வெற்றி பாதையில் அழைத்துச் செல்வதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயம் தற்போது ஏற்பட்டு இருக்கிறது. அதிமுக தொண்டர்களின் ஆதரவோடு, பொதுமக்களின் நம்பிக்கையை பெற்று, ஜனநாயக வழியில், கட்சியின் அடிப்படை சட்டதிட்ட விதிகளை காப்பாற்றி, அனைவரையும் ஒருங்கிணைத்து கட்சியை வழி நடத்தி செல்லவும், வருகின்ற மக்களவை தேர்தலில் அதிமுக வெற்றி பெறவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் இனி வருங்காலங்களில் விரைந்து எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: