தமிழ்நாட்டில் உள்ள வட மாநில தொழிலாளர்களுக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை: சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரப்பப்படுகிறது; அச்சமின்றி பணியாற்றி வருவதாக அமைச்சர் சி.வி.கணேசன் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் எவருக்கும் எந்தவித அச்சுறுத்தலும் இல்லை அமைச்சர் சி.வி.கணேசன் கூறியுள்ளார். இதுகுறித்து தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி.கணேசன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: பெருந்தொழில் மற்றும் சிறு தொழில் நிறுவனங்கள் பல ஆண்டுகளாகவே தமிழ்நாட்டில் பெருமளவில் முதலீடு செய்து வந்து அதில் பல மாநிலங்களில் இருந்தும் தொழிலாளர்கள் வந்து அமைதியான சூழ்நிலையில் பணியாற்றி மாநிலத்தின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றி வருகின்றார்கள். அதேபோல், மேம்பால கட்டுமானம், மெட்ரோ ரயில் உள்ளிட்ட பல்வேறு முக்கிய துறைகளிலும் வட மாநில தொழிலாளர்கள் பெருமளவில் ஈடுபட்டு அந்த துறைகளின் வளர்ச்சிக்கு தங்களது பங்களிப்பை வழங்கி வருகின்றார்கள்.

அந்த தொழிலாளர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் அந்தந்த நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. அனைத்து நிறுவனங்களிலும் தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலச் சட்டங்கள் கடைபிடிக்கப்படுவதை துறை மூலமாக உறுதி செய்யப்படுகிறது. தமிழ்நாட்டிற்கு வருபவர்களை நேசக் கரம் கொண்டு வரவேற்பது தான் தமிழ் மக்களின் பண்பாடு மற்றும் நடைமுறை. விருந்தோம்பலுக்கு பெயர்பெற்ற தமிழ்நாட்டு மக்களும், தொழிலாளர் நலன் காக்கும் தமிழ்நாடு அரசும் இந்த உடலுழைப்பு தொழிலாளர்களின் பங்களிப்பை நன்கு உணர்ந்து இருப்பதால் இணக்கமான, அமைதியான சூழ்நிலையில் இங்கு அனைவரும் வாழ்ந்து வருகிறார்கள்.  

இந்த சூழ்நிலையில் சில சமூக வலைதளங்களில் உண்மைக்கு மிகவும் மாறான, தவறான உள்நோக்கத்தோடு, வடமாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் சில இடங்களில் தாக்கப்படுவதாக விஷமத்தனமான செய்தி சிலரால் பரப்பப்பட்டு வருகிறது. இதில் எந்தவிதமான உண்மையும் இல்லை என்பதை தமிழ்நாட்டில் இருக்கும் வடமாநிலத்தவர் உள்ளிட்ட அனைவரும் அறிவார்கள். தொழில் அமைதிக்கும், சமூக அமைதிக்கும் எப்போதும் பெயர்பெற்று விளங்கும் தமிழ்நாட்டில் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெற்றதாக செய்தி பரப்புபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் மட்டுமல்ல எல்லா மாநில தொழிலாளர்களும் எவ்வித அச்சமுமின்றி அமைதியாக, சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

* டிஜிபி எச்சரிக்கை

ராமநாதபுரத்தில் டிஜிபி சைலேந்திரபாபு நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ‘தமிழ்நாட்டில் வெளிமாநிலத்தவர், வெளிநாட்டினர் பாதுகாப்பாக வேலை பார்த்து வருகின்றனர். சிலர் சமூக வலைத்தளங்களில் அவர்களை தாக்குவதாக தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். 2 வீடியோக்களை வெளியிட்டு தவறான தகவல் பரப்பியதாக முகம்மது ரஸ்பி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். தவறான தகவல் பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். போலீசார் மீது தாக்குதல் நடத்த முயற்சிக்கும் ரவுடிகள் மீது, தற்காப்பு நடவடிக்கையாக துப்பாக்கியால் சுட்டு பிடிக்கவும் தயங்கக் கூடாது. இந்தாண்டு காவல்நிலைய துன்புறுத்தல் எங்கும் நடக்கவில்லை, அறிவியல்பூர்வமான விசாரணைகள் நடத்தப்படுவதால் துன்புறுத்தல்கள் இல்லை’ என்றார்.

Related Stories: