சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ்.இளங்கோவன் மாபெரும் வெற்றியை பெற்றதற்கு காரணம், முதல்வர் மு.க.ஸ்டாலினின் இரண்டாண்டு கால சிறந்த ஆட்சி தான். பொதுமக்கள், உழைக்கிற மக்கள், பெண்கள் இவர்களெல்லாருக்கும் இந்த ஆட்சியின் செயல்பாடுகள் திருப்தி அளித்திருக்கின்ற என்பதற்கான சாட்சி தான் இந்த வெற்றி.
முதல்வரின் அயராத பணி இந்த வெற்றியை ஈட்டி கொடுத்துள்ளது. பாஜவாக இருந்தாலும், அதிமுகவாக இருந்தாலும் ஒரு தெளிவு இல்லாமல் இருந்தனர்.
எங்கள் கூட்டணிக்கு ஒரு தெளிவு இருந்தது. எங்கள் கொள்கைகளை நாங்கள் அழுத்தமாக சொன்னோம். ஆனால் அவர்களுக்கு தெளிவு இல்லை. சலனத்தோடு இருந்தனர். சில இடங்களில் பிரதமர் மோடியின் படத்தை அதிமுகவினர் பயன்படுத்தினர். சில இடங்களில் பாஜ கொடியை கூட அவர்கள் பயன்படுத்த தயாராக இல்லை. எனவே இவைகள் எல்லாம் இந்த வெற்றிக்கு ஒரு அடிப்படை காரணம். ஈவிகேஎஸ்.இளங்கோவன் காங்கிரஸ் கட்சியில் ஒரு மூத்த தலைவர். அயராது உழைக்கக் கூடியவர். கட்சிக்காக அரும் பணியாற்றியவர். அவருக்கு இந்த வெற்றி நல்ல ஆர்வத்தை கொடுத்துள்ளது. தமிழ்நாடு காங்கிரசும், திமுக கூட்டணியும் இந்த வெற்றியை பெரிதும் மதிக்கிறோம்.