கல்லூரி மாணவிகளின் வளர்ச்சிக்கு அண்ணனாக இருந்து உதவி செய்வேன்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

நாமக்கல்: கல்லூரி மாணவிகளின் வளர்ச்சிக்கு, அண்ணனாக இருந்து உதவி செய்வேன் என, நாமக்கல் அரசு மகளிர் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலைக்கல்லூரியில், கவிஞர் ராமலிங்கம் பிள்ளையின் உருவச்சிலை திறப்பு விழா நேற்று மாலை நடைபெற்றது. இதில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலைமை வகித்து பேசினார். மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் வரவேற்று பேசினார்.

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கவிஞர் சிலையை திறந்து வைத்து பேசியதாவது: தமிழ்மொழியின் அடையாளமாக திகழ்ந்த நாமக்கல் கவிஞர், இன்றும் நாமக்கல்லின் அடையாளமாக திகழ்கிறார். வரலாற்றை மாற்றும் நபர்கள், இன்றைய சமூகத்தில் நிறைய பேர் இருக்கிறார்கள். தமிழ்நாட்டின் பெயரை மாற்றக்கூட ஒருவர் முயற்சி செய்தார். அவர் யார் என்று அனைவருக்கும் தெரியும். அதை தடுத்து நிறுத்தியது திமுக தான். அதிமுக ஆட்சி இருந்திருந்தால், தமிழ்நாட்டின் பெயரை மாற்றியிருப்பார்கள்.

கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில், புதுமை பெண் திட்டத்தை முதல்வர் ஏற்படுத்தி, அவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கி வருகிறார். பெண்கள் முன்னேற கல்வி அவசியமாகும். பெண்கள் நினைத்தால், இந்த உலகில் எதையும் சாதிக்க முடியும். கல்லூரி மாணவிகளின் வளர்ச்சியில், நான் ஒரு அண்ணனாக இருந்து உதவிசெய்வேன். உங்கள் வீட்டு பிள்ளையாக, உங்கள் அன்பு சகோதரனாக என்றும் பணியாற்றுவேன். அரசு மகளிர் கல்லூரியில் கலையரங்கம், உள்விளையாட்டரங்கம் அமைக்க வேண்டும் என்ற 2 கோரிக்கையையும் விரைவில் நிறைவேற்றி கொடுப்பேன். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: