வாக்காளர் அட்டையுடன் 66% பேர் ஆதார் எண் இணைப்பு: தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல்

சென்னை: நாடு முழுவதும் போலி வாக்காளர் அடையாள அட்டையை ஒழிக்கவும், ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் வாக்குரிமை வைத்திருப்பவர்களை தடுக்கவும், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் திட்டம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 1ம் தேதி தொடங்கப்பட்டது. அதே நேரத்தில், கட்டாயப்படுத்தக்கூடாது என்றும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதனால், பொதுமக்கள் அதிக அளவில் ஆர்வம் காட்டவில்லை. இந்நிலையில், வரும் 31ம் தேதியுடன் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் முடிவடைகிறது. ஆனால், தமிழ்நாட்டில் நேற்றைய நிலவரப்படி, 66.04 அளவுக்கே, அதாவது 4 கோடியே 8 லட்சம் பேர், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர்.

இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் நேற்று நிலவரப்படி, 66.04 சதவீதம் பேர், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். அதாவது, 4 கோடியே 8 லட்சம் பேர் இணைத்துள்ளனர். அதிகபட்சமாக அரியலூர் மாவட்டத்தில் 97.83 %  பேரும், அடுத்தபடியாக, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 93.14% பேரும் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். குறைந்தபட்சமாக சென்னை மாவட்டத்தில் 31.96% பேர் மட்டுமே இணைத்துள்ளனர். எனவே, கால நீட்டிப்பு வழங்குவது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம்தான் முடிவு செய்யும்.இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: