கொள்ளிடம் அருகே எருக்கூர் நவீன அரிசி ஆலையிலிருந்து வெளியேறும் கரி துகள்களால் மக்கள் அவதி: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

கொள்ளிடம்: கொள்ளிடம் அருகே எருக்கூர் நவீன அரிசி ஆலையிலிருந்து வெளியேறும் கரி துகள்களால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். எனவே நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடத்திலிருந்து சீர்காழி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் எருக்கூரில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்திற்கு சொந்தமான நவீன அரிசி ஆலை இயங்கி வருகிறது. இங்குள்ள அரிசி ஆலைக்கு மயிலாடுதுறை மாவட்டத்தின் பல பகுதிகளில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் இங்குள்ள நவீன சேமிப்பு கிடங்கில் சேமித்து வைக்கப்பட்டு தினந்தோறும் அவியல் இடப்பட்டு பின்னர் நவீன இயந்திரம் மூலம் உலர வைக்கப்பட்டு அரவைக்கு பின்பு அரசுக்கு சொந்தமான நியாய விலை கடைகளுக்கு விற்பனைக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.

இங்குள்ள நெல் சேமிப்பு கலன்கள் இந்தியாவிலேயே நவீன முறையில் இயங்கக்கூடிய சிறந்த சேமிப்பு கலங்களாக செயல்பட்டு வருகின்றன. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு எருக்கூர் நவீன அரிசி ஆலையில் உலர வைக்கப்பட்ட நெல் இயந்திரத்தின் மூலம் அரைக்கப்படும் போது அதிலிருந்து தவிடு, உமி மற்றும் கரி துகள்கள் வெளியேறி கிராமத்தில் உள்ள குடியிருப்புகளில் சென்று படிவதுடன் தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனங்கள் மற்றும் பேருந்துகளில் செல்பவர்கள் மீது பட்டு கண் நோயினால் பலர் பாதிக்கப்பட்டு வந்தனர். அதனைத் தொடர்ந்து நவீன வகையிலான இயந்திரம் பழுது நீக்கம் செய்யப்பட்டு நல்ல முறையில் இயங்கி வந்தது. இதனால் ஆலையிலிருந்து கரி துகள்கள் வெளியேறி சாலையில் செல்வோர்களின் கண்களில் படாமல் இருந்தது.

மேலும் நவீன அரிசி ஆலையில் வெளியேறும் உமி மற்றும் கரி துகள்கள் ஆலைக்குள்ளேயே முறையாக சேமிக்கப்பட்டது.ஆனால் கடந்த ஒரு மாத காலமாக மீண்டும் இயந்திரத்தில் ஏதோ பழுது ஏற்பட்டு உமியுடன் கரி துகள்கள் பறந்து வந்து சுற்று வட்டார பகுதியில் உள்ள குடியிருப்புகளில் சென்று சேர்வதுடன் தேசிய நெடுஞ்சாலையில் செல்வோரின் கண்களில் பட்டு விபத்து ஏற்படும் சூழ்நிலையில் உள்ளது. இருசக்கர வாகனங்களில் பயணிப்பவர்கள் கண்களில் கரி துகள்கள் படும்போது திடீரென கண் எரிச்சல் ஏற்பட்டு வாகனத்தை திருப்பும் போது வாகன ஓட்டிகள் துரதிஷ்ட வசமாக கீழே விழுந்து விபத்துக்குள்ளாகி வருகின்றனர். கண்ணில் கரித்துகள் பட்டவுடன் அதை குணப்படுத்தும் நோக்கில் மருத்துவமனைகளுக்கும் சென்று வருகின்றனர். இதனால் கண் பார்வை மங்குவதற்கான வாய்ப்பு உள்ளது.

இதுகுறித்து எருக்கூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும்,ஆன்மீக பேரவை தலைவருமான பட்டுரோஜா கூறு கையில்,எருக்கூரில் உள்ள நவீன அரிசி ஆலை இந்தியாவிலேயே மிகவும் சிறப்பு வாய்ந்தது. இங்கு அதிக எண்ணிக்கையில் நெல் மூட்டைகளை நீண்ட காலங்கள் சேமித்து வைக்கும் வகையில் வசதி வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இங்கிருந்து கரி துகள்கள் இரண்டு வருடத்திற்கு முன்பு வெளியேறி வந்ததால் ஆலை பழுது நீக்கம் செய்யப்பட்டு மிகவும் சிறப்பாக இயங்கி வந்தது. ஆலையிலிருந்து வெளியேறும் கரி துகள்கள் வெளியேறாமல் முழுமையாக நிறுத்தப்பட்டது. ஆனால் கடந்த ஒரு மாத காலமாக மீண்டும் தொடர்ந்து ஆலையிலிருந்து கரித்துகள் வெளியேறி அப் பகுதியில் உள்ள வீடுகளில் வந்து படிவதுடன் அங்கு உள்ளவர்களின் கண்களிலும் பட்டு கண் பார்வை பாதிப்பு ஏற்படுவதற்கு பெரும் காரணமாக இருந்து வருகிறது. மேலும் சுற்றுப்புறத்தில் மாசு ஏற்படுகிறது எனவே ஆலையிலிருந்து தொடர்ந்து வெளியேறி வரும் கரி துகள்களை போர்க்கால அடிப்படையில் நிறுத்துவதற்கு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் விரைந்து வந்து ஆய்வு செய்து நிரந்தரமாக கரித்துகள் வெளியேறுவதை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Related Stories: