சென்னை: சென்னை மெட்ரோ ரயிலில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு மிக விரைவில் சரிசெய்யப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. சரியாக 8.30 மணியளவில் ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்ட்ரல் முதல் விமான நிலையம் செல்லும் நீள வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை நிறுத்தப்பட்டிருந்தது. தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டிருப்பதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
பயணிகள் ஆலந்தூரில் இருந்து இறங்கி மாற்று பாதையான விம்கோ நகர் ரயில் செல்லும் அண்ணா சாலை வழியாக செல்ல வேண்டும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. ரயில் சேவை பாதிப்பால் வேளைக்கு செல்வோர், விமான நிலையங்களுக்கு செல்வோர் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக ஆயிரம்விளக்கில் இருந்து தேனாம்பேட்டை, அண்ணாசாலை, நந்தனம், கிண்டி உள்ளிட்ட மெட்ரோ ரயில் நிலையங்களில் அதிகளவில் பயணிக்கள் காத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனிடையே, சுரங்கப் பாதையில் ரயில் சிக்கியதால் அரசினர் தோட்டம் வழியே ஆலந்தூர் செல்லும் நீல வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சென்ட்ரல் - கோயம்பேடு வழியாக விமான நிலையம் செல்லும் மெட்ரோ ரயில் ஆலந்தூர் வரை மட்டுமே இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் சென்னை மெட்ரோ ரயிலில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு மிக விரைவில் சரிசெய்யப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.