சென்னை: பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா வெளியிட்டுள்ள அரசாணை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை சேர்ந்த பள்ளிகளில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு விரைவில் பொதுத் தேர்வுகள் தொடங்க உள்ளன. இதையடுத்து, தேர்வுப் பணிகளை மேற்பார்வையிட செல்ல அனுமதி அளித்து அரசாணை வழங்க வேண்டும் என்று தேர்வுத்துறை இயக்குநர் அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். அரசுத் தேர்வுகள் இயக்குநரின் கருத்துருவை ஆய்வு செய்த அரசு, அவரின் கருத்துருவை ஏற்று மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடக்க உள்ள பொதுத் தேர்வுகள் பணிகளை கண்காணிக்கவும், மேற்பார்வையிடவும் பள்ளிக்கல்வித்துறையின் பணியாற்றும் அதிகாரிகள், இயக்குநர்கள், இணை இயக்குநர்கள், ஆகியோரை மாவட்ட வ ாரியாக தேர்வுப் பணியை மேற்பார்வையிட நியமனம் செய்தும் அரசாணை வெளியிடப்படுகிறது. இதன்படி சென்னை மாவட்டத்துக்கு பள்ளிக்கல்வி ஆணையர் நந்தகுமார், செங்கல்பட்டு மாவட்டம்- ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஸ்ரீவெங்கடப்பிரியா, காஞ்சிபுரம் மாவட்டம்- தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக செயலாளர் கண்ணப்பன், திருவள்ளூர் மாவட்டம்- ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி கூடுதல் திட்ட இயக்குநர் ராமேஸ்வர முருகன், ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
