நாடாளுமன்ற தேர்தலுக்கு எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் பணியை மேற்கொள்வோம்: கே.எஸ்.அழகிரி பேட்டி

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் விடுத்த அறை கூவலின் படி, வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு ஒத்த கருத்துடைய எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் பணியை காங்கிரஸ் மேற்கொள்ளும் என்று கே.எஸ்.அழகிரி கூறினார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு கடந்த மாதம் 27ம் தேதி நடைபெற்றது. இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளராக காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ்.இளங்கோவன் வெற்றி பெற்றார்.

இந்நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று காலை நிருபர்களிடம் கூறியதாவது:முதல்வர் மு.க.ஸ்டாலின் நல்லாட்சியானது மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்துள்ளது. தமிழ்நாடு மக்களுக்கு தேர்தலின் போது திமுக கொடுத்த வாக்குறுதி 2 ஆண்டுகளுக்குள் 80 சதவீதத்துக்கும் அதிகமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. மக்களின் அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. திமுக-காங்கிரஸ் கூட்டணி கொள்கை சார்ந்த அரசியலை முன்னெடுத்தோம். எங்களை எதிர்த்து நின்ற அதிமுகவினர் சஞ்சலத்தில் இருக்கிறார்கள்.

அவர்களால் அவர்களுடைய அணியையே ஒழுங்குபடுத்த முடியவில்லை. எனவே சஞ்சலத்தில் உள்ள தன்னம்பிக்கை இல்லாத கட்சியை மக்கள் விரும்பமாட்டார்கள். ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் ஒத்த கருத்துடைய எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் பணியை மேற்கொள்ளும். வரும் நாடாளுமன்ற தேர்தலில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி டெல்லியை அலங்கரிக்கும்.அதில் மாற்று கருத்து இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: