மேல்மருவத்தூரில் பங்காரு அடிகளார் பிறந்தநாள் ரூ.3 கோடியில் நலத்திட்ட உதவிகள்

சென்னை: மேல்மருவத்தூரில் பங்காரு அடிகளாரின் 83வது பிறந்தநாள் விழாவையொட்டி, ரூ.3 கோடியில் நலத்திட்ட உதவிகளை பங்காரு அடிகளார் ஏழை எளியோருக்கு வழங்கினார். மேல்மருவத்தூர் பங்காரு அடிகளாரின் 83வது பிறந்தநாள் விழா இன்று காலை சித்தர் பீடத்தில் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, நேற்று அதிகாலை 3 மணியளவில் ஆதிபராசக்தி அம்மனுக்கு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டது. தொடர்ந்து ஆதிபராசக்தி சித்தர் பீடத்திற்கு பங்காரு அடிகளாரை தங்க ரதத்தில் விழுப்புரம், கடலூர் மாவட்ட செவ்வாடை பக்தர்கள் ஊர்வலமாக அழைத்து வந்தனர். இதையடுத்து, பிரதமர் மோடியின் சகோதரர் பங்கஜ் தாமோதர்தாஸ் மோடி, பங்காரு அடிகளாரை சந்தித்து ஆசிபெற்று அம்மனை வழிபட்டார்.

நேற்று மாலை 5 மணியளவில் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க அரங்கில் பங்காரு அடிகளாரின் பிறந்தநாள் விழாவையொட்டி ரூ.3 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் தலைமை வகித்தார். தலைமை செயல் அதிகாரி அ.ஆ.அகத்தியன், ஆதிபராசக்தி மருத்துவமனை இயக்குனர் ரமேஷ் முன்னிலை வகித்தனர். ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க துணை தலைவர் ஸ்ரீதேவி வரவேற்றார். தொடர்ந்து விழா மலர் வெளியிடப்பட்டது.

சிறப்பு விருந்தினராக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.எம்.டி.டீக்காராமன், வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் யூனியன் மேலாளர் கிறிஸ்டோபர் டெய்லர் கிராப்ட் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் விழா  பேருரையாற்றினார். பங்காரு அடிகளார் ரூ.3 கோடி மதிப்பிலான இருசக்கர வாகனம், சைக்கிள், கல்வி உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் சைக்கிள் உள்ளிட்ட 115 விதமான நலத்திட்ட உதவிப் பொருட்களை 3,100 ஏழை, எளியவர்களுக்கு வழங்கினார். இன்று காலை சித்தர் பீடத்தில் ஆதிபராசக்தி அம்மனுக்கு பங்காரு அடிகளார் சிறப்பு பூஜை செய்து செவ்வாடை பக்தர்கள் முன்னிலையில் கேக் வெட்டுகிறார். நிகழ்ச்சியில் அரசியல் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டு பங்காரு அடிகளாரிடம் ஆசி பெறுகின்றனர்.

Related Stories: