சென்னையில் இந்திய தசை-எலும்பு புற்றுநோயியல் சங்க மாநாடு: புற்றுநோய் சிகிச்சை நிபுணர் ஆனந்த் ராஜன் தகவல்

சென்னை: இந்திய தசை-எலும்பு புற்றுநோயியல் சங்கத்தின் 9வது ஆண்டு மாநாடு சென்னையில்  நடக்கிறது என புற்றுநோய் சிகிச்சை நிபுணர் ஆனந்த் ராஜன் கூறினார். சென்னை அடையாறு புற்றுநோய் மையத்தில் புற்றுநோய் நிபுணர்கள் ஆனந்த்ராஜன், வெங்கட்ராமன் ராதாகிருஷ்ணன் கூட்டாக நிருபர்களிடம் கூறியதாவது: தசைக்கூட்டு பகுதி  புற்றுநோய்க்கு உரிய  சிகிச்சை அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற  நோக்குடன் 2014ம் ஆண்டு இம்சோஸ் என்ற அமைப்பு தொடங்கப்பட்டது. ஒன்பது ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து சென்னையில் மூன்று நாட்கள் கருத்தரங்கம் நடைபெற உள்ளது. இதில் சிறப்பு விருந்தினராக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொள்கிறார்.

2014ல் நிறுவப்பட்ட இம்சோஸ், எலும்பு மற்றும் மென்மையான திசுக் கட்டிகளின் அறிவியல், சான்றுகள் அடிப்படையிலான, விரிவான பலதரப்பட்ட மேலாண்மையை ஊக்குவிக்கவும், ஒருங்கிணைக்கவும் உருவாக்கப்பட்டது. இதன் வருடாந்திர மாநாடு என்பது தசைக்கூட்டு புற்றுநோயியல் துறையில் குறிப்பிடத்தக்க தேசிய மாநாடு ஆகும். சர்வதேச ஆசிரியர்களில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மருத்துவர் பீட்டர் சூங் மற்றும் அமெரிக்கா, லண்டன் உள்ளிட்ட மருத்துவர்கள், ஆசிரியர்கள் கலந்து கொள்கின்றனர்.

எய்ம்ஸ் மற்றும் டாடா மெமோரியல் மருத்துவமனை உள்பட இந்தியா முழுவதும் உள்ள சிறந்த புற்றுநோயியல் நிறுவனங்களும் அவற்றின் சிறந்த ஆசிரியர்கள் பிரதிநிதித்துவப்படுத்தப்படுகின்றனர். இந்த மாநாட்டில் வேகமாக முன்னேறி வரும் தசை-எலும்பு புற்றுநோய் துறையின் நுணுக்கங்களை மருத்துவர்கள் கற்றுக் கொள்வது பற்றியும் விவாதிக்க உள்ளனர். நமது உடலில் ஏதாவது கட்டி இருந்தாலும் அதை உடனடியாக மருத்துவமனையை அணுகி உரிய பரிசோதனை செய்து கொண்டால் மட்டுமே புற்றுநோயிலிருந்து பூரண குணமடைய முடியும். தினசரி புற்றுநோய் விகிதம் அதிகரித்து வருவதால் பொதுமக்களிடையே விழிப்புணர்வு கிராமப்புறங்களிலும், நகர்ப்புறங்களிலும்  ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு தெரிவித்தனர்.

Related Stories: