திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் தளபதி கோப்பை பெண்கள் டி20 கிரிக்கெட் போட்டி: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை: திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் தளபதி கோப்பை பெண்கள் டி20 கிரிக்கெட் போட்டியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். திமுக விளையாட்டு மேம்பாட்டு அணியின் சார்பில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு ‘‘தளபதி கோப்பை’’பெண்கள் டி20 கிரிக்கெட் போட்டி மார்ச் 2 மற்றும் மார்ச் 3, 4 ஆகிய தேதிகளில் சென்னை சேப்பாக்கம் மெரினா விளையாட்டு மைதானத்தில் நடைபெறும் என்று திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி செயலாளர் தயாநிதி மாறன் எம்பி அறிவித்திருந்தார். அதன்படி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக, சென்னை சேப்பாக்கத்தில் உள்ள மெரினா விளையாட்டு மைதானத்தில், தளபதி கோப்பை பெண்கள் டி-20 கிரிக்கெட் போட்டி துவக்க விழா இன்று காலை நடந்தது. விழாவிற்கு திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி செயலாளர் தயாநிதி மாறன் எம்பி தலைமை தாங்கினார். போட்டியை திமுக இளைஞர் அணி செயலாளரும், விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

திமுக விளையாட்டு மேம்பாட்டு அணியின் இலட்சினையையும் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார். இதனை தயாநிதி மாறன் பெற்று கொண்டார். அப்போது அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டோர் உடன் இருந்தார்.  விளையாட்டு வீரர்களின் அணிவகுப்பை ஏற்று கொண்டு மைதானத்திற்கு உள்ளே சென்ற உதயநிதி ஸ்டாலின், கிரிக்கெட் விளையாடியும் அனைவரையும் உற்சாகப்படுத்தினார். தொடர்ந்து விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: விளையாட்டு மேம்பாட்டு அணியின் முதல் நிகழ்ச்சியே கலைஞருக்கு பிடித்த கிரிக்கெட் போட்டியாக நடத்தப்படுவது மகிழ்ச்சியளிக்கிறது. திமுகவில் உள்ள அணிகளுக்கு இடையே, எந்த அணி நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்துவது என்ற போட்டி இருக்கும். அதில் விளையாட்டு மேம்பாட்டு அணி வெற்றி பெற்றுள்ளது. ரூ.25 கோடி மதிப்பில் முதலமைச்சர் கோப்பை போட்டி நடைபெற உள்ளது. திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி, விளையாட்டுத்துறை இணைந்து பணியாற்றி விளையாட்டுத்துறையை மேம்படுத்தும். இன்று தொடங்கி கிரிக்கெட் போட்டி வரும் 4ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கிரிக்கெட் போட்டியில் 8 அணிகள் பங்கேற்கிறது.

இவ்வாறு அவர் பேசினார். பின்னர் உதயநிதி ஸ்டாலின் அளித்த பேட்டியில்,‘‘ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸின் வெற்றி, எதிர்பார்க்கப்பட்ட ஒன்று தான். அதிமுகவின் தோல்வி குறித்து விமர்சிக்க விரும்பவில்லை’’என்றார். விளையாட்டு போட்டி தொடக்க விழாவில் மாவட்ட திமுக செயலாளர் சிற்றரசு, பெருநகர சென்னை மாநகராட்சியின் ஆளுங்கட்சி துணை தலைவரும், திருவல்லிக்கேணி பகுதி செயலாளர் ஏஆர்பிஎம்.காமராஜ், சேப்பாக்கம் பகுதி செயலாளரும், மாநகராட்சி மண்டல குழுத்தலைவருமான எஸ்.மதன்மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். போட்டியின் ஒருங்கிணைப்பு பணிகளை மாநில துணைச் செயலாளர்களான பொன்.கௌதம் சிகாமணி எம்.பி., எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி, ஜே.எல்.ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ, பைந்தமிழ் பாரி மற்றும் நெல்லை வே.நம்பி ஆகியோர் மேற்கொண்டிருந்தனர்.

Related Stories: