புதுவண்ணாரப்பேட்டையில் பரபரப்பு, பருப்பு குடோனில் தீ விபத்து

தண்டையார்பேட்டை: புதுவண்ணாரப்பேட்டை நம்மையாமேஸ்திரி தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (57). இவருக்கு அதே பகுதியில் பருப்பு குடோன் உள்ளது. பருப்பு குடோனில் பத்துக்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றனர். இந்த பருப்பு குடோனுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து வியாபாரிகள் பருப்பு வாங்கி செல்வார்கள். இந்நிலையில் இன்று அதிகாலை குடோனில் இருந்து கரும் புகை வெளியேறியது. சிறிது நேரத்தில் தீ கொழுந்துவிட்டு எரிய துவங்கியது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர்  உடனடியாக தீயணைப்பு நிலையத்துக்கு  தகவல் தெரிவித்தனர். அதன்படி புதுவண்ணாரப்பேட்டை போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் வாகனங்களில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

பின்னர், தண்ணீர் பீய்ச்சியடித்து அரை மணி நேரத்துக்கும் மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருந்தபோதிலும் குடோனில் இருந்த பருப்பு வேகவைக்கும் பாய்லர் மற்றும் பருப்புகள் கருகி சேதமானது. இதன்மதிப்பு ரூ.5 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தபோது, பருப்பு வேகவைக்கும் பாய்லர் சூடாகி அருகில் இருந்த பிளாஸ்டிக் பற்றி எரிந்து தீவிபத்து ஏற்பட்டது தெரியவந்தது. உடனடியாக தீ அணைக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவம் புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

Related Stories: