பெரியபாளையம்: சிறுவாபுரி முருகன் கோயிலில் நேற்று பக்தர்களின் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இப்பணியின் முடிவில், கடந்த 70 நாட்களில் பக்தர்கள் ரூ.54.40 லட்சம் உண்டியல் காணிக்கை செலுத்தியிருந்ததாக கோயில் நிர்வாகம் தகவல் தெரிவித்தனர். பெரியபாளையம் அருகே சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோயிலில் 6 வாரங்கள் தொடர்ந்து செவ்வாய்க்கிழமைகளில் வந்து, நெய்தீபம் ஏற்றி வழிபட்டால், அவர்களின் வேண்டுதல்கள் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. இதனால் ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமைகளில் சிறுவாபுரி முருகன் கோயிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதி வருகிறது. கோயிலுக்குள் சுமார் 3 மணி நேரம் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்து, முருகனை தரிசித்து வருகின்றனர்.
முன்னதாக, கடந்த 19 ஆண்டுகளுக்கு பிறகு சிறுவாபுரி முருகன் கோயில் ரூ.1 கோடி மதிப்பில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று, கடந்த ஆகஸ்ட் மாதம் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன்பிறகு, கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், சிறுவாபுரி முருகன் கோயிலில், கடந்த 70 நாட்களுக்கு பிறகு நேற்று கோயில் வளாகத்தில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இப்பணிகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சித்ராதேவி மேற்பார்வையில், கோவில் செயல் அலுவலர் செந்தில்குமார் முன்னிலையில் திருக்கோயில் வளாகத்தில் பணியாளர்கள், பொதுமக்கள் என ஏராளமான மக்கள் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் நேற்று மாலை பணி நிறைவு பெற்றதும், உண்டியல் காணிக்கை மூலம் ரூ.54,40,097 ரொக்கப் பணமும், தங்கம் 32 கிராமும், வெள்ளி 3.4 கிலோ என பக்தர்கள் காணிக்கை செலுத்தி உள்ளதாக கோயில் நிர்வாகத் தரப்பில் தகவல் தெரிவித்தனர்.