கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள, சென்னை புறநகர் காவல்நிலையத்தில் போலீசார் நியமிக்கப்படுவார்களா?

அண்ணாநகர்: ஆசியாவில் மிகப்பெரிய சந்தையாக விளங்கும் கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி, பழம், பூ மற்றும் உணவுதானியம் ஆகிய மார்க்கெட்டுகள் செயல்படுகிறது. இங்கு தினமும் லட்சக்கணக்கில் மக்கள் வந்து பொருட்கள் வாங்கி செல்கின்றனர்.  இதன்காரணமாக அதிக பணப்புழக்கம் உள்ள இந்த பகுதியில் இரவு நேரங்களில் தனியாக செல்லும் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களை குறிவைத்து வழிப்பறி, செயின், செல்போன் பறிப்பு, பைக் திருட்டு மற்றும் கடைகளின் பூட்டை உடைத்து கொள்ளையடிப்பது போன்றவை நடைபெற்று வருகிறது. இந்த குற்றச் சம்பவங்களை தடுக்கவும் வியாபாரிகளுக்குள் தகராறு ஏற்பட்டால் நடவடிக்கை எடுக்கவும் மார்க்கெட் வளாகத்தில் சென்னை புறநகர் காவல் நிலையம் திறக்கப்பட்டது. ஆனால் புறநகர் காவல் நிலையம் இருந்தும் அங்கு பணி செய்ய போலீசார் இருப்பதில்லை என்று வியாபாரிகள் குற்றச்சாட்டு வைக்கின்றனர்.இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது;

கோயம்பேடு மார்க்கெட்டில் செல்போன், செயின் பறிப்பு, வழிப்பறி, பைக் திருட்டு, பிக்பாக்கெட் ரவுடிகள் அட்டகாசம் அதிகரித்து வருவதை தொடர்ந்து மார்க்கெட்டில் காவல்நிலையம் வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். இதன்படி புறநகர் காவல் நிலையம் அமைக்கப்பட்டது.

ஆனால் புறநகர் காவல் நிலையத்தில் காவலர்கள் இருப்பதில்லை.   சமீபகாலமாக கந்துவட்டி பிரச்னையால் ஒரு ஆட்டோ டிரைவர் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு கோயம்பேடு காவல் நிலையத்தில் சென்று நடவடிக்கை எடுக்கும்படி கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மார்க்கெட்டில் கந்துவட்டி பிரச்னை தலைவிரித்தாடுகிறது. இதன்காரணமாக பலபேர் தற்கொலை செய்யும் நிலைமை உருவாகியுள்ளது. சென்னை புறநகர் காவல் நிலையம் இருந்தும் போலீசார் இல்லாததால் குற்றச்சம்பவங்கள், ரவுடிகள் அட்டகாசம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அனைத்து காவல்நிலையமும் சுத்தமாகவும் சிறப்பாகவும் பராமரிக்க வேண்டும் என்றும் புகார் மனு கொடுக்க வரும் பொதுமக்களிடம் அன்புடன் நடந்துகொள்ள வேண்டும் என்றும் தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் சைலேந்திரபாபு தெரிவித்தார். ஆனால் இவற்றை கடைபிடிப்பதாக தெரியவில்லை. எனவே, கோயம்பேடு மார்க்கெட்டில் குற்றச் சம்பவங்களை தடுக்கவும் வியாபாரிகளுக்கு பாதுகாப்பு தரவும் சென்னை புறநகர் காவல் நிலையத்தில் போலீஸ்காரர்களை நியமித்து பாதுகாப்பு கொடுக்க உயரதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு கூறினர்.

Related Stories: