முட்புதர்கள் சூழ்ந்து வசிக்க முடியாத நிலை; பயனற்ற நிலையில் சுனாமி குடியிருப்புகள்: நடவடிக்கைக்கு 3 கிராம மக்கள் காத்திருப்பு

கடலூர் முதுநகரில் முட்புதர்கள் சூழ்ந்து அடிப்படை வசதிகள் இல்லாத நிலையில் பயனற்ற நிலையில் சுனாமி குடியிருப்புகள் அமைந்துள்ளன. இதனை சீரமைத்து தங்களுக்கு உதவிட வேண்டும் என மூன்று மீனவ கிராம மக்கள் காத்திருக்கின்றனர். கடலூர் மாவட்டம் கடல் சார்ந்த மாவட்டம் என்ற நிலையில் அதற்கு ஏற்ற வகையில் கடற்கரை கிராமங்களும், மீன்பிடி தொழிலும் பிரதானமாக அமைந்துள்ளது. இம்மாவட்டத்தில் கடந்த 2004ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியின் தாக்கத்தில் கடற்கரை கிராமங்கள் கடலூர் முதல் சிதம்பரம் வரை அழிவின் நிலைப்பாட்டில் சிக்கி பல மனித உயிர்களை பலி கொடுத்த நிலை ஏற்பட்டது.

இதை தொடர்ந்து பல்வேறு தன்னார்வ அமைப்புகள் உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் மூலம் பல்வேறு மீனவ கிராம மக்களுக்கு உதவிடும் வகையில் குடியிருப்புகள் மற்றும் அடிப்படை தேவைகள் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. கடலூர் மாநகராட்சி முதுநகர் பகுதியில் இதன் வரிசையில் செல்லங்குப்பம் அருகே குட்டி ஆண்டவர் கோயில் பகுதியில் சுனாமி குடியிருப்புகள் கட்டப்பட்டு செல்லங்குப்பம், சோனங்குப்பம், அக்கரைகோரி, சிங்காரத்தோப்பு உள்ளிட்ட பகுதி மீனவ கிராம மக்களுக்கு வழங்கிட ஏற்பாடு செய்யப்பட்டது.

சுமார் 300 குடியிருப்புகள் தனி வீடுகளாக இப்பகுதியில் இது போன்று அமைக்கப்பட்டுள்ள நிலையில் சுனாமி தாக்கத்தால் பாதிக்கப்பட்ட 3 கிராம மக்களுக்கு வழங்கிய நிலையில் அடிப்படை வசதிகள் என்பது மாயமாகியது.

அப்போதைய அதிமுக ஆட்சியில் பேரிடர் பாதிப்பில் சிக்கித் தவித்த மீனவ கிராம மக்களுக்கு தன்னார்வ அமைப்புகள் உதவினாலும் இது போன்ற அடிப்படை வசதிகள் மேம்பாடு இல்லாத காரணத்தால் பலன் கிடைத்தும், பயனற்ற நிலையில் ஏமாற்றுத்துடன் மீனவ கிராம மக்கள் சம்பந்தப்பட்ட சுனாமி குடியிருப்பு பகுதியில் இருந்து திரும்பி செல்லும் நிலை ஏற்பட்டது.

சுமார் 300 குடியிருப்புகள் செல்லங்குப்பம் குட்டி ஆண்டவர் கோயில் பகுதியில் சுனாமி பாதித்த மக்களுக்காக கிடைக்க பெற்ற நிலையில் பல்வேறு அடிப்படை வசதிகள் இல்லாத காரணத்தால், சம்பந்தப்பட்ட பகுதி முட்புதர்கள் சூழ்ந்து ஆள் நடமாட்டம் இல்லாமல் சமூக விரோத கூடாரமாக மாறிவரும் அவல நிலை ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள்,அப் பகுதி மக்கள் கவலையுடன் தெரிவித்தனர்.

இது தொடர்பாக சிங்காரத்தோப்பு, அக்கரை கோரி, சோனங்குப்பம், சுனாமி நகர் பகுதி மீனவ கிராம மக்கள் மாவட்ட நிர்வாகத்திடமும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடமும் பலமுறை முறையிட்டும் பயனற்ற நிலை தொடர்கிறது என ஆதங்கத்துடன் தெரிவித்தனர்.  ஆண்டுகள் பல கடந்த நிலையில் குடியிருப்புகள் அமைக்கப்பட்டு இருந்தும் அதனை பயன்படுத்த முடியாத நிலையில் தற்போது கிராம மக்கள் தவித்துக் கொண்டிருக்கின்றனர். சாலை வசதி, மின்சார வசதி, குடிநீர் வசதி என அடிப்படை வசதிகள் செய்து கொடுத்தால் இப்பகுதி மக்களுக்கு பயன் தரும் என தெரிவிக்கின்றனர்.

Related Stories: