கவுரவ டாக்டர் பட்டம் வழங்கிய நிகழ்விற்கும் அண்ணா பல்கலைக்கழகத்திற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது: துணைவேந்தர் வேல்ராஜ் திட்டவட்டம்

சென்னை: கவுரவ டாக்டர் பட்டம் வழங்கிய நிகழ்விற்கும் அண்ணா பல்கலைக்கழகத்திற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என அண்ணா பல்கலை கழக துணைவேந்தர் வேல்ராஜ் தெர்வித்துள்ளார். கடந்த 26ம் தேதி கிண்டி அண்ணா பல்கலைக்கழக விவேகானந்தர் ஆடிட்டோரியத்தில் இன்டர்நேஷனல் ஆன்ட்டி கரப்ஷன் அண்ட் ஹியூமன் ரைட்ஸ் கவுன்சில் என்ற அமைப்பின் பெயரில் நடிகர் வடிவேலு உள்ளிட்ட பிரபலங்களுக்கு வழங்கப்பட்ட டாக்டர் பட்டம் போலியானது என சர்ச்சை எழுந்தது.

இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் அளித்த பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் வேல்ராஜ் கூறியதாவது:

கவுரவ டாக்டர் பட்டம் வழங்கிய நிகழ்விற்கும் அண்ணா பல்கலைக்கழகத்திற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. ஜனவரி மாதம் ஓய்வு பெற்ற நீதியரசர் கொடுத்த சிபாரிசு கடிதம் அடிப்படையில் விவேகானந்தர் ஆடிட்டோரியத்தை வாடகைக்கு கொடுத்தோம். சம்பந்தப்பட்ட அமைப்பின் மீது காவல் துறையில் புகார் அளித்துள்ளோம். திட்டமிட்டு ஞாயிறு மாலை 3 மணிக்கு யாரும் இல்லாத நேரத்தில் நிகழ்ச்சியை நடத்தி உள்ளனர்.

இது தொடர்பாக கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளிப்பதோடு, குற்றம் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவோம். தனியார் அமைப்பு சார்பில் கொடுத்த இந்த கவுரவ டாக்டர் பட்டம் வழங்கும் நிகழ்வில் பிரபலங்கள் உட்பட 40 பேர் வாங்கி ஏமாந்துள்ளனர். ஆளுநர் செயலாளரின் கவனத்திற்கு கொண்டு சென்று விட்டோம். அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள விவேகானந்தர் ஆடிட்டோரியத்தை இனி தனியாருக்கு வாடகைக்கு விடுவதை நிறுத்த திட்டமிட்டுள்ளோம்.

ஓய்வுபெற்ற நீதிபதி பெயரில் போலி கடிதம்

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் தனியார் அமைப்பு நடத்திய நிகழ்ச்சியில் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது சர்ச்சைக்குள்ளானது. இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக ஓய்வுபெற்ற நீதிபதி வள்ளிநாயகம் அழைக்கப்பட்டு இருந்தார். இந்த தனியார் அமைப்பு அண்ணா பல்கலைக்கழகத்தில் நிகழ்ச்சி நடத்துவதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி வள்ளிநாயகத்தின் பரிந்துரை கடிதம் வழங்கியதாக கூறப்படுகிறது.

பல்கலைக்கழகம் வழங்க வேண்டிய கவுரவ டாக்டர் பட்டத்தை தனியார் அமைப்பு வழங்கி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அந்த நிகழ்ச்சியை நடத்துவதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி வள்ளிநாயகம் வழங்கியதாக போலி பரிந்துரை கடிதத்தை கொடுத்ததும் தற்போது அம்பலம் ஆகியுள்ளது. இதுபற்றி ஓய்வுபெற்ற நீதிபதி வள்ளிநாயகத்திடம் நிருபர்கள் தொடர்பு கொண்டு கேட்டபோது, ‘அதுபோல பரிந்துரை கடிதம் எதையும் நான் வழங்கவில்லை. சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள அழைப்பு விடுத்ததால் சென்றேன். என் பெயரில் கடிதம் கொடுத்த தனியார் அமைப்பு மீது நடவடிக்கை எடுக்கும்படி, புகார் கொடுக்க என்னுடைய உதவியாளரிடம் தெரிவித்துள்ளேன். தவறு செய்தவர்களை சும்மா விடக்கூடாது’ என்றார்.

Related Stories: