சென்னை: திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலினுக்கு நேற்று 70வது பிறந்த நாள். இதையொட்டி சென்னை ஆழ்வார்பேட்டை வீட்டில் இருந்து புறப்பட்ட மு.க.ஸ்டாலின் மெரினா கடற்கரை அண்ணா நினைவிடத்திற்கு காலை 7 மணிக்கு வந்தார். அங்கு மலர்வளையம் வைத்து வணங்கினார். தொடர்ந்து, கலைஞரின் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார்.
அப்போது திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு எம்பி, முதன்மை செயலாளர் கே.என்.நேரு, துணை பொதுச்செயலாளர்கள் ஐ.பெரியசாமி, பொன்முடி, ஆ.ராசா, அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், எ.வ.வேலு, பெரியகருப்பன், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, தா.மோ.அன்பரசன், ஆவடி நாசர், மெய்யநாதன், சி.வீ.கணேசன், சிவசங்கர், மு.பெ.சாமிநாதன், மஸ்தான், மகேஷ் பொய்யாமொழி, மனோ தங்கராஜ் உள்ளிட்ட அமைச்சர்கள். எம்பிக்கள் தயாநிதி மாறன், கலாநிதி வீராசாமி, தமிழச்சி தங்கபாண்டியன், முன்னாள் எம்பிக்கள் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன் மற்றும் பரந்தாமன், தாயகம் கவி, மயிலை த.வேலு, ஏ.எம்.வி.பிரபாகர ராஜா, மாதவரம் சுதர்சனம், ஐட்ரீம் மூர்த்தி, டி.ஆர்.பி.ராஜா, ஆர்.டி.சேகர், ஜோசப் சாமுவேல் உள்ளிட்ட எம்எல்ஏக்கள், வீட்டு வசதி வாரிய தலைவர் பூச்சி முருகன், தமிழ்நாடு மாற்று திறனாளிகள் நலவாரிய உறுப்பினர் ரெ.தங்கம், பகுதி திமுக செயலாளர் மதன் மோகன் உள்ளிட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.கலைஞர் நினைவிடத்தில், “மார்ச் 1 திராவிட பொன்நாள் 70. முயற்சி.. முயற்சி... அது தான் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்” என்ற வாசகம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. பின்னர் பெரியார் திடல் சென்று பெரியார் நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். அங்கு அவரை திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி புத்தகம் வழங்கி வரவேற்றார். பின்னர் கோபாலபுரம் இல்லம் சென்று, கலைஞரின் உருவப்படத்திற்கு மலர் தூவி வணங்கினார். தனது தாயார் தயாளு அம்மாளிடம் வாழ்த்து பெற்றார். மேலும் சி.ஐ.டி. காலனி இல்லத்தில் கலைஞர் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் வீடு திரும்பிய மு.க.ஸ்டாலினுக்கு குடும்பத்தினர் வாழ்த்து தெரிவித்தனர். அவர்களுடன் பிறந்தநாள் கொண்டாடி கேக் வெட்டினார்.பிறந்தநாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார். அவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துக் கொண்டார். பிரதமர் மோடி டிவிட்டர் பதிவில், “தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். நீண்ட ஆயுளுடனும், ஆரோக்கியத்துடனும் வாழ வாழ்த்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார். இதேபோல, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொலைபேசியில் தொடர்பு கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். அவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்தார். இதேபோல காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல்காந்தி ஆகியோரும் வாழ்த்து தெரிவித்தனர்.பீகார் முதல்வர் நிதிஷ்குமார், கேரள முதல்வர் பினராயி விஜயன், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டி ஆகியோரும் வாழ்த்து தெரிவித்தனர். தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் காலை 9.05 மணியளவில் சென்னை அறிவாலயத்திற்கு வந்தார். அங்கு அவருக்கு நாதஸ்வரம், செண்டை மேளம், இசைக்கச்சேரி என பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. தொண்டர்களின் உற்சாக வரவேற்பு, ஆரவார முழக்கத்துக்கு மத்தியில் அண்ணா அறிவாலய வளாகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரக்கன்று நட்டினார். பின்னர் அங்கிருந்து அவர் கலைஞர் அரங்கத்திற்கு சென்றார். அங்கு அவர் தொண்டர்கள் மத்தியில் பிறந்தநாள் கேக் வெட்டினாார். தொடர்ந்து தொண்டர்களிடம் வாழ்த்து பெற்றார். ஆயிரக்கணக்கான தொண்டர்கள் நீண்ட வரிசையில் நின்று பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர். தொண்டர்கள் அனைவரிடம் இருந்தும் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் பரிசாக புத்தகம் மற்றும் சால்வை பெற்றுக் கொண்டு அவர்களுக்கு நன்றி தெரிவித்தார். நரிக்குறவர்கள் தனியாக வந்து வாழ்த்து தெரிவித்தனர். கிராமத்தில் இருந்து வந்திருந்த பெண்கள், சீர் வரிசையுடன் வந்து வாழ்த்து தெரிவித்தனர். சிலர் நெல் மணிகளை கோர்த்து மாலையாக செய்து வாழ்த்தினர். மேலும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மரக்கன்று வழங்கினார். அவர் காலை 9.15 மணிக்கு தொண்டர்களிடம் வாழ்த்துகளை பெற தொடங்கினார். நின்றபடியே மதியம் 12.15 மணி வரை தொண்டர்களிடம் வாழ்த்து பெற்றார். தொடர்ச்சியாக 3 மணி நேரம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களின் அன்பான வாழ்த்து மழையில் நனைந்தார்.
அவரது பிறந்தநாளை தமிழகம் முழுவதும் திமுக தொண்டர்கள் கோலாகலமாக கொண்டாடினர். தமிழகம் முழுவதும் முக்கிய சந்திப்புகளில் திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரண்டு திமுக கொடியை ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். பொதுமக்களுக்கு காலை, மதியம் உணவுகளை வழங்கினர். மேலும் ஏழை-எளியவர்களுக்கு, பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்க தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கானோர் சென்னை நோக்கி வந்ததால் சென்னை நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது.
மரக்கன்றுகள் நட்டு, பராமரித்து வளர்ப்பீர்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைத்தள பதிவில், ‘‘மரத்தை நாம் வளர்த்தால் மரம் நம்மை வளர்க்கும்!” என்றார் முத்தமிழறிஞர் கலைஞர். அவரது சொற்படி இந்த ஆண்டும் மரக்கன்று ஒன்றை நட்டு வைத்தேன். என் அன்புக் கட்டளையை ஏற்றுப் புத்தகங்களைப் பிறந்தநாள் பரிசாகக் கொண்டுவந்த உடன்பிறப்புகளுக்கு மஞ்சள் பையுடன் மரக்கன்றுகளை நன்றியாக வழங்கினேன். அவற்றை நட்டு, பராமரித்து வளர்ப்பீர் நாளை நலமாக! இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.ஒட்டகம் பரிசாக வழங்கிய தொண்டர்சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களிடம் பிறந்தநாள் வாழ்த்து பெற்றார். அப்போது அவருக்கு, திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த ஜாகிர்சா என்ற திமுக தொண்டர் பரிசாக ஒட்டம் வழங்கினார். இது வாழ்த்து சொல்ல வந்த தொண்டர்கள் அனைவரிடத்திலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. திமுக தொண்டர் ஜாகிர்சா ஆடு, மாடு என ஒவ்வொரு பிறந்தநாளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பரிசு அளித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.லண்டனில் இருந்து ராகுல்காந்தி வாழ்த்துஅகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி, லண்டனிலிருந்து தொலைபேசி வாயிலாக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினை தொடர்பு கொண்டு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தார். அப்போது நல்ல ஆரோக்கியத்துடனும், மகிழ்ச்சியுடனும் வாழ வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.