சென்னை: தளபதி கோப்பைக்கான பெண்கள் டி20 கிரிக்கெட் போட்டி சென்னையில் இன்று துவங்குவதாக திமுக விளையாட்டு மேம்பாட்டு அணியின் செயலாளர் தயாநிதி மாறன் அறிவித்துள்ளார்.
திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி செயலாளர் தயாநிதி மாறன் எம்பி வெளியிட்ட அறிவிப்பு:திமுக விளையாட்டு மேம்பாட்டு அணியின் சார்பில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு நடைபெறும் “தளபதி கோப்பை” பெண்கள் டி20 கிரிக்கெட் போட்டி 2ம் தேதி (இன்று), 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் சென்னை சேப்பாக்கம் மெரினா விளையாட்டு மைதானத்தில் நடைபெற உள்ளது. போட்டியை திமுக இளைஞரணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் இன்று காலை 9.30 மணியளவில் துவக்கி வைக்கிறார்.
மேலும், திமுக விளையாட்டு மேம்பாட்டு அணிக்கான லோகோ எனப்படும் இலட்சினையும் வெளியிட உள்ளார். இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சி மேம்பாட்டு ஆணையத்தின் அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், பணிகள் நிலைக் குழுத்தலைவர் நே.சிற்றரசு, பெருநகர சென்னை மாநகராட்சியின் ஆளுங்கட்சி துணை தலைவரும், திருவல்லிக்கேணி பகுதி செயலாளருமான ஏஆர்பிஎம்.காமராஜ், சேப்பாக்கம் பகுதி செயலாளரும், மாநகராட்சி மண்டல குழுத்தலைவருமான எஸ்.மதன்மோகன் பங்கேற்கின்றனர். இந்த போட்டியின் ஒருங்கிணைப்பு பணிகளை மாநில துணைச் செயலாளர்களான பொன்.கவுதம் சிகாமணி எம்.பி., எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி., ஜே.எல்.ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ, பைந்தமிழ் பாரி மற்றும் நெல்லை வே.நம்பி ஆகியோர் மேற்கொள்ள உள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.