திருவொற்றியூர்: எர்ணாவூரில் மாநகராட்சி சார்பில் ரூ.52 லட்சம் செலவில் தார் சாலை அமைக்கும் பணி தொடங்கியது. இதன் மூலம் மக்களின் 10 ஆண்டுகால கோரிக்கை நிறைவேறியது. சென்னை மாநகராட்சி, திருவொற்றியூர் மண்டலத்தில் 4வது வார்டுக்குட்பட்ட மகாலட்சுமி நகர், பாலாஜி நகர் மற்றும் மணலி விரைவு சாலையை இணைக்கும் பிரதான சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. கடந்த அதிமுக ஆட்சியின்போது 10 ஆண்டுகளாக இந்த சாலை பராமரிக்கப்படாமல் கிடப்பில் விட்டதால் பழுதடைந்து குண்டும் குழியுமானது. இதனால் சாலையில் குடிநீர், ஆம்புலன்ஸ் மற்றும் பிற வாகனங்கள் செல்ல முடியாத நிலை இருந்தது. மேலும் பொதுமக்கள் நடந்து செல்லவும் சிரமப்பட்டனர்.
