உணவு பொருள்களை கிட்டங்கிகளுக்கு கொண்டுசெல்ல வாகனங்கள் அமர்த்துவதற்கான டெண்டர் நடவடிக்கையில் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: உணவு பொருட்களை கிட்டங்கிகளுக்கு கொண்டு செல்வது தொடர்பாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் கோரிய டெண்டர்கள் மீது மேல் நடவடிக்கை எடுக்காமல் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகம், உணவு பொருட்களை மாவட்ட கிட்டங்கிகள் மற்றும் அமுதம் அங்காடிகளுக்கு கொண்டு செல்வதற்காக வாகனங்களை பணியமர்த்துவதற்கான டெண்டர்கள் கோரியது.

 இந்த டெண்டர்களுக்கு தடை விதிக்கக் கோரி சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் நதியழகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்குகள் தொடர்ந்திருந்தார்.

 அந்த மனுக்களில், உச்ச நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட மத்திய அரசின் சுற்றறிக்கையின் அடிப்படையில் மாநில அளவிலான குழு இந்த டெண்டர்களை கோரியுள்ளது. இது தமிழ்நாடு டெண்டர் வெளிப்படைத்தன்மை சட்டம் மற்றும் விதிகளுக்கு விரோதமானது.

இரண்டு கோடி ரூபாய்க்கு மேலான பணிகளுக்கான டெண்டருக்கு விண்ணப்பிக்க 30 நாட்கள் அவகாசம் வழங்க வேண்டும். அதை மீறி 14 நாட்கள் மட்டுமே அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இது சட்டவிரோதமானது. இந்த டெண்டரில் அனுபவமில்லாத நிறுவனங்ளும் பங்கேற்க அனுமதிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த டெண்டர்களை ரத்து செய்து புதிதாக டெண்டர்கள் கோருமாறு உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

 இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், மாநில குழுக்கள் மூலம் உணவு பொருட்கள் கொள்முதல் செய்வது குறித்த டெண்டர் வெளியிட வேண்டும் என்ற மத்திய அரசின் சுற்றறிக்கைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. எனவே, இந்த டெண்டர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 8ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Related Stories: