முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களே நீங்கள் தேசிய அரசியலுக்கு வாருங்கள், தமிழ்நாட்டின் வளர்ச்சியை தேசிய அளவில் காட்டுங்கள்: ஃபரூக் அப்துல்லா அழைப்பு..!

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசிய அரசியலுக்கு வர வேண்டும் என பரூக் அப்துல்லா அழைப்பு விடுத்துள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை தமிழகம் முழுவதும் திமுக தொண்டர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்தநாள் விழா பிரமாண்ட பொதுக்கூட்டம் தொடங்கி நடைபெற்றது. பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய ஜம்மு-காஷ்மீரின் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா; தமிழ்நாடு மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவின் நம்பிக்கையாக விளங்குகிறார் முதலமைச்சர்.

ஒரு சிறந்த தலைவரின் மகன் நீங்கள். உங்கள் தந்தையும், என் தந்தையும், ஒரு சிறந்த இந்தியாவைக் கட்டமைக்கப் பாடுபட்டனர். நீங்கள் தேசிய அரசியலுக்கு வாருங்கள். உங்கள் மாநிலத்தின் வளர்ச்சியைத் தேசிய அளவில் காட்டுங்கள். முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசிய அரசியலுக்கு வர வேண்டும். அனைவரும் ஒன்று சேர வேண்டிய தருணம்; விழித்தெழுந்து எதிர்க்கட்சிகள் இணைய வேண்டும். எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அனைவரும் இந்திய குடிமக்கள்தான். அனைவரும் ஒற்றுமையாக வாழ்வதற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது, அதை முறியடிக்க எதிர்க்கட்சி தலைவர்கள் ஓரணியில் திரள வேண்டும்.

எதிர்க்கட்சித் தலைவர்கள் ஓரணியில் திரள வேண்டும் என்று கோரிக்கை விடுக்கவில்லை, வலியுறுத்துகிறேன். எதிர்க்கட்சிகளின் பிரதமர் யார் என்பதை தேர்தல் வெற்றிக்கு பின் முடிவு செய்யலாம். உறுதியான நம்பிக்கை உள்ள ஒவ்வொருவராலும் நாட்டின் போக்கை மாற்ற முடியும். ராகுல் காந்தி நடத்திய ஒற்றுமை யாத்திரை இளைஞர்களிடையே பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது இவ்வாறு கூறினார்.

Related Stories: