விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரமத்தில் 41,009 மனநல மாத்திரைகள்: சிபிசிஐடி அறிக்கையில் அதிர்ச்சி தகவல்..!

சென்னை: விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரம விவகாரத்தில் சிபிசிஐடி நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கை வெளியானது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டத்தில் உள்ள குண்டலபுலியூர் கிராமத்தில் செயல்பட்டு வந்த அன்பு ஜோதி ஆசிரமத்தில், சேர்க்கப்பட்டிருந்த ஆதரவற்றோர் காணாமல் போனது தொடர்பாகவும், பாலியல் துன்புறுத்தல் தொடர்பாகவும் பதிவு செய்யப்பட்ட வழக்கு சிபிசிடிக்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில், அந்த இல்லத்தில் சேர்க்கப்பட்டிருந்த திருப்பூரை சேர்ந்த சபீருல்லாவை காணவில்லை எனக்கோரியும் அவரை மீட்டு தர வேண்டும் என்றும் அமெரிக்காவில் உள்ள அவரது உறவினர் சலீம்கான் என்பவரின் நண்பர் ஹலிதீன் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி சுந்தர் மற்றும் நிர்மல்குமார் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஏற்கனவே பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் சபீருல்லா காணாமல் போன வழக்கு தொடர்பாக சிபிசிஐடியின் அறிக்கையை கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் முனியப்பராஜ் தாக்கல் செய்தார்.

அறிக்கையை இதையடுத்து, சலீம் கான் நேரில் வந்து அடையாளம் காட்டுவது தொடர்பாக விளக்கமளிக்க இரண்டு வார கால அவகாசம் வழங்கிய நீதிபதிகள், வழக்கு விசாரணையை மார்ச் 14ம் தேதிக்கு தள்ளி வைத்தனர். மேலும், முறைகேடுகள் தொடர்பான புகாரில் கைது செய்யப்பட்ட ஆசிரமத்தைச் சேர்ந்த 8 பேர் சிபிசிஐடி காவலில் எடுத்து விசாரிப்பதாக தெரிவிக்கப்பட்டதை ஏற்ற நீதிபதிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டனர். இந்நிலையில் விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரம விவகாரத்தில் சிபிசிஐடி நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கை வெளியானது.

அதில் அரசு மருத்துவமனைகளில் மட்டுமே கிடைக்கும் 8 வகையான 41,009 மனநல மாத்திரைகள் ஆசிரமத்தில் இருந்தது. அரசு மருத்துவமனைகளில் மட்டுமே கிடைக்கும் மாத்திரைகள் அவர்களுக்கு எப்படி கிடைத்தது என தெரியவில்லை. தமிழக, கர்நாடக போலீசாரின் போலி லெட்டர் பேட், சீல்களை பயன்படுத்தி ஆசிரம வாசிகளை இடமாற்றம் செய்தது அம்பலமாகியது. குரங்குகளை வைத்து ஆசிரமவாசிகளை அச்சுறுத்தியதும் அம்பலமானது. ஆசிரமத்தில் இருந்து வீடு திரும்பிய பெண்களிடம் விசாரித்த பின் முழு விபரம் தெரியவரும்.

அன்புஜோதி ஆசிரமத்தில் இருந்து காணாமல் போனதாக சொல்லப்பட்ட நபர் பெங்களூருவில் புதைக்கப்பட்டதாக தகவல் கிடைத்துள்ளது. விழுப்புரம் ஆசிரமத்தில் இருந்து தப்பிய ஜெபருல்லாவின் அடையாளத்தில் ஆண் சடலம் பெங்களூருவில் கடுபிடிக்கப்பட்டது. அமெரிக்காவில் இருக்கும் ஜெபருல்லாவின் உறவினர்கள் ஒத்துழைத்தால், டிஎன்ஏ பரிசோதனை செய்ய தயார் இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.

Related Stories: