வாலாஜாபாத், புழல் பகுதியில் அரசு பள்ளி மாணவர்களின் அறிவியல் கண்காட்சி

சென்னை: வாலாஜாபாத் மற்றும் புழல் பகுதிகளில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளிகளில் நேற்று மாணவ-மாணவிகளின் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இதில் ஏராளமான மாணவர்களின் அறிவியல் தொடர்பான படைப்புகளை கண்டு ஆசிரியர்களும் பெற்றோரும் பாராட்டு தெரிவித்தனர்.

வாலாஜாபாத் அருகே சங்கராபுரம் ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலை பள்ளி வளாகத்தில் நேற்று அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இக்கண்காட்சியை வட்டார வள மைய மேற்பார்வையாளர் குணசேகரன் துவக்கி வைத்தார்.

இக்கண்காட்சியில் முப்பரிமாண தொலைக்காட்சி, நீரியல் பாலம், நில அதிர்வு, ஒலிப்பான், செயற்கை நீர்வீழ்ச்சி, சுவாச மண்டலம், கழிவுநீர் நீக்க மண்டலம், சத்தான உணவு வகைகள், இயற்கை உரம் தயாரித்தல், காய்கறிகள் மற்றும் பழ வகைகளில் உள்ள சத்துப் பொருட்கள், சாலை பாதுகாப்பு, போக்குவரத்து சிக்னல், காற்று மாசு, பாலிதீன் பைகளால் ஏற்படும் மாசு, மண்வளம், உள்ளட்டைகள் குறித்து பள்ளி மாணவ-மாணவிகளின் அறிவியல் படைப்புகளை கண்டு ஆசிரியர்களும் பெற்றோரும் பாராட்டு தெரிவித்தனர். இதில் பெற்றோர்-ஆசிரியர் கழக தலைவர் ஆறுமுகம், ஊராட்சி வார்டு உறுப்பினர் கதிரவன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் சத்யா, பள்ளி தலைமை ஆசிரியர் மோகனா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல், புழல் அருகே சூரப்பட்டில் உள்ள ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப் பள்ளி வளாகத்தில் நேற்று சர். சி.வி.ராமன் பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி மாணவ-மாணவிகளின் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இதில் பள்ளி மாணவ-மாணவிகளின் ஒளிப்படக் கருவி, புகைபோக்கி, காய்கறிகள் வெட்டும் கருவி, மண் அள்ளும் இயந்திரம், தூசி உறிஞ்சி கருவி, காற்றாலை உள்பட பல்வேறு அறிவியல் படைப்புகள் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரின் பாராட்டை பெற்றன. இதற்கான ஏற்பாடுகளை பள்ளி தலைமையாசிரியர் சாந்தி மற்றும் ஆசிரியர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

Related Stories: