அண்ணா பல்கலை.யில் போலி டாக்டர் பட்டம் வழங்கியது தொடர்பாக போலீசில் புகார் அளித்துள்ளோம்: துணைவேந்தர் வேல்ராஜ் விளக்கம்

சென்னை: அண்ணா பல்கலையில் போலி டாக்டர் பட்டம் வழங்கியது தொடர்பாக போலீசில் புகார் அளித்துள்ளோம் என துணைவேந்தர் வேல்ராஜ் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் நடிகர் வடிவேலு, இசையமைப்பாளர் தேவா உள்ளிட்டோருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது போலி என அம்பலமானது. இந்நிலையில் இது குறித்து அண்ணா பல்கலை. துணைவேந்தர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், நிகழ்ச்சி நடத்திய தனியார் நிறுவனத்திற்கும், பல்கலைக்கழகத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை. தனியார் நிறுவனம் நடத்திய பட்டமளிப்பு விழாவுக்காக அண்ணா பல்கலை. அரங்கத்தை பயன்படுத்தினர்.

அண்ணா பல்கலைக்கழகம் புனிதமான இடம்; இதுபோன்ற தவறான செயல் நடைபெற்றதற்கு வருந்துகிறோம் என தெரிவித்தார். முன்னாள் நீதிபதி வள்ளிநாயகம் கடிதம் தந்ததாக கூறி பட்டமளிப்பு விழாவுக்கு அனுமதி கோரப்பட்டது. ஓய்வுபெற்ற நீதிபதி வள்ளிநாயகத்தை ஏமாற்றியுள்ளனர் என துணைவேந்தர் கூறினார். அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் இனி தனியார் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி கிடையாது. அண்ணா பல்கலை. பள்ளி, கல்லூரி நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே பொதுவாக அனுமதி கொடுப்போம் என துணைவேந்தர் வேல்ராஜ் திட்டவட்டமாக தெரிவித்தார். தனியார் அமைப்பு மீது போலீசில் புகார் அளிக்கப்படும் எனவும் அவர் உறுதிபட கூறினார்.

Related Stories: