ரத்தின விநாயகர் கோயிலுக்கு சொந்தமான ரூ.8 கோடி மதிப்பிலான சொத்து திருக்கோயில் வசம் சுவாதீனம்: அறநிலையத்துறை தகவல்

சென்னை: ராயப்பேட்டை ரத்தின விநாயகர் திருக்கோயிலுக்குச் சொந்தமான ரூ. 8 கோடி மதிப்பீட்டிலான சொத்துக்கள் திருக்கோயில் வசம் சுவாதீனம் பெறப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படியும்,  இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவுறுத்தலின்படியும் இந்து சமய  அறநிலையத்துறையின்பகட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில்களுக்கு சொந்தமான சொத்துக்களை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

அதன்படி சென்னை, இராயப்பேட்டை, இரத்தின விநாயகர் திருக்கோயிலுக்குச் சொந்தமான ரூ.8 கோடி மதிப்பீட்டிலான சொத்துக்கள் மீட்கப்பட்டு திருக்கோயில் வசம் சுவாதீனம் பெறப்பட்டுள்ளது. சென்னை, இராயப்பேட்டை, அருள்மிகு இரத்தின விநாயகர் திருக்கோயிலுக்குச் சொந்தமான ஒயிட்ஸ் ரோடு மற்றும் திரு.வி.க ரோட்டில் அமைந்துள்ள 4,754 சதுரடி பரப்பிலான வணிக கட்டடங்கள் 3 நபர்களுக்கு வாடகைக்கு விடப்பட்டிருந்தது.

இவர்கள் நீண்ட காலம் வாடகை செலுத்தாமலும், அதிக அளவில் நிலுவை வைத்திருந்ததாலும் சென்னை இணை ஆணையர் மண்டலம் - 2 நீதிமன்ற சட்டப்பிரிவு - 78 உத்தரவின்படி, சென்னை உதவி ஆணையர் திரு.எம்.பாஸ்கரன் அவர்கள் முன்னிலையில் காவல்துறை மற்றும் வருவாய்துறை அலுவலர்களின் உதவியுடன் அக்கட்டடங்கள் பூட்டி சீலிடப்பட்டு, திருக்கோயில் வசம் சுவாதீனம் பெறப்பட்டது. இச்சொத்துக்களின் தற்போதைய சந்தை மதிப்பு சுமார் ரூ.8 கோடியாகும். இந்நிகழ்வின்போது திருக்கோயில் செயல் அலுவலர் திரு. கோபி, ஆய்வாளர் திரு. மணி மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.

Related Stories: